ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 13 கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ‘ஜல்ஜீவன் மிஷன்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டமானது கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது ஆகும். அனைத்து ஊரக வீடுகளும், குடிநீர் பெறுவதில் தன்னிறைவு பெறுவதே ‘ஜல்ஜீவன்’ திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தின் தொடக்கத்தின் போது வெறும், 3 கோடியே 23 இலட்சம் கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குழாய் இணைப்புகள் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் கிராமப்புற வீடுகளுக்கு 13 கோடி குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
தற்போதைய, நிலவரப்படி, கோவா, தெலங்கானா, ஹரியானா, குஜராத், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, டையூ & டாமன், அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு 100 சதவீதம் அளவுக்கு முழுமையாகக் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பீகாரில் 96.39 சதவீதம் அளவிலும், மிசோரமில் 92.12 சதவீதம் அளவிலும் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களும் விரைவில் முழுமையான குழாய் இணைப்புகளைப் பெறவுள்ளது.
இதற்கிடையே, கோவா, ஹரியானா, பஞ்சாப், அந்தமான் நிக்கோபார், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சீரான குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதைக் கிராமச் சபைகள் மூலம் கிராம மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மத்திய அரசின் இடைவிடாத முயற்சிகளின் விளைவாக, நாட்டில் 9 இலட்சத்து 15 ஆயிரம் பள்ளிகள் மற்றும் 9 இலட்சத்து 52 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்க்கை மாறி உள்ளது. முன்பு பெண்கள் நீண்ட தூரம் நடந்து சென்று குடங்களில் குடிநீரைச் சுமந்து வந்தனர். தற்போது வீட்டு வாசலிலேயே குடிநீர் கிடைப்பதால் அவர்களின் நேரம் சேமிக்கப்பட்டுள்ளதோடு அவர்களின் வாழ்க்கை நிலையும் மாறியுள்ளது.