சென்னையில் ISIS தீவிரவாதிகள் குறிப்பிட்ட ஒரு சில மதத் தலைவர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டதும், அதை அறிந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அந்த பயங்கரவாதிகளைக் கைது செய்ததன் மூலம், சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி இறந்துவிட்டாலும், அந்த அமைப்பு தொடர்ந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக, அமெரிக்கா மற்றும் மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள காவல்துறையினர் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தியாவில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களில் ISIS தீவிரவாத இயக்கத்தினர் கால்பதித்து, சதித்திட்டம் தீட்டி வருவதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால், 4 மாநிலங்களிலும், என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில்தான், சென்னை பாடியில் சையது நபீல் அகமது பதுங்கி இருப்பதாக என்.ஐ.ஏ.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாடியில் தங்கும் விடுதி ஒன்றில் இருந்த சையது நபீல் அகமதுவைச் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில், கேரளாவில் ISIS தீவிரவாத ஆதரவாளர்கள் தனிக்குழு அமைத்து செயல்பட்டு வருவது தெரிய வந்தது. குறிப்பாக, திருச்சூரில் ISIS தீவிரவாத கும்பலின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு சதி திட்டம் தீட்டியது வெளியானது.
இவர்கள் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் குறிப்பிட்ட ஒரு மதத் தலைவர்களைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதை் கண்டுபிடித்து, வெற்றிகமாக முறியடித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஐ.எஸ். கும்பலின் தலைவன் சையது நபீல் அகமது கைது செய்யப்பட்டுள்ளான்.
தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் முச்சந்தி காடுகளிலும், சந்தனகட்டை வீரப்பன் வாழ்ந்த காடுகளிலும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் ஆயுத பயிற்சி மற்றும் ஒத்திகையில் ஈடுபட்டது தொடர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே, சையது நபீல் அகமதுவின் கூட்டாளியான ஆசீப் என்பவனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், மேலும் சிலரை கைது செய்ய என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்து களத்தில் குதித்துள்ளனர்