ஐ.எஸ்.எல். போட்டி நடைபெறும் அதேசமயத்தில், ஆசிய விளையாட்டு போட்டியும் நடைபெறுவதால் கால்பந்துப் போட்டியில் இந்திய அணி பங்குபெறுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி, சீனாவின் ஹாங்சோவ் நகரில் வரும் 23-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், கால்பந்து போட்டிகள் வரும் 19-ம் தேதி முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் இந்திய அணியைச் சேர்ந்த 22 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த அணியில் பெங்களூரு எப்.சி.யிலிருந்து 6 வீரர்களும், மும்பை சிட்டியிலிருந்து 3 வீரர்களும், எப்.சி. கோவா, மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால், ஒடிஸா, கேரளா பிளாஸ்டர்ஸ் ஆகியவற்றில் இருந்து தலா 2 வீரர்களும், பஞ்சாப் எப்.சி., சென்னையின் எப்.சி., ஐதராபாத் எப்.சி.யில் இருந்து தலா 1 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
எனினும், ஐ.எஸ்.எல். போட்டி நடைபெறும் அதேநேரத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளும் நடப்பதால், அப்போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களில் சிலரை சம்பந்தப்பட்ட கிளப் நிர்வாகம் விடுவிக்க மறுப்பதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அகில இந்திய கால்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் ஷாஜி பிரபாகரன், ஐ.எஸ்.எல். அணி நிர்வாகத்தினருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், “ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கால்பந்து அணிக்கு தேர்வாகி இருக்கும் வீரர்களை தேசத்தின் நலனை மனதில் கொண்டு கிளப் நிர்வாகங்கள் விடுவிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இதுகுறித்து, அகில இந்திய கால்பந்து சம்மேளனத் தலைவர் கல்யாண் சவுபே கூறுகையில், “ஐ.எஸ்.எல். போட்டியை 10 நாட்கள் தள்ளி வைத்து அக்டோபர் மாதத்தில் தொடங்குமாறு போட்டி அமைப்பு குழுவினர் மற்றும் அணிகளின் நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக, ஐ.எஸ்.எல். போட்டி அமைப்புக் குழு நிர்வாகி ஒருவர் கூறுகையில், “அகில இந்திய கால்பந்து சம்மேளனம் மற்றும் அனைத்து அணிகளிடமும் கலந்து ஆலோசித்துத்தான் போட்டி அட்டவணை முடிவு செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் போட்டியை தள்ளி வைக்க வாய்ப்பில்லை” என்று கூறியிருக்கிறார்.
ஆகவே, ஆசிய விளையாட்டு கால்பந்துப் போட்டியில் இந்திய அணி பங்கேற்குமா என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது.