சனாதன தர்மத்துக்கு எதிராக திமுக எம்பி ஆ.ராசாவின் கருத்து, இந்தியா கூட்டணியின் இந்துமத வெறுப்பை பிரதிபலிப்பதாக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
சனாதன தர்மத்தை அழிப்பேன் என திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு, நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இதனிடையே, முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஆ.ராசா, சனாதனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது, சனாதன தர்மத்தை எய்ட்ஸ் நோய் என்றும் தொழுநோய் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவரது கருத்துக்கு மத்திய அமைச்சரும், பா.ஜனதா மூத்த தலைவருமான தர்மேந்திர பிரதான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ஆ.ராசாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதில், சனாதன தர்மம் பற்றி இந்த முறை ஆ.ராசா, அவதூறு கருத்து தெரிவித்துள்ளார்.
ஆ.ராசா போன்றவர்கள் இடம் பெற்றுள்ள இந்தியா கூட்டணியின் மன நிலை, சனாதனத்திற்கு எதிராக உள்ளது. இந்தியா கூட்டணியில் இந்துமத வெறுப்பு மிக ஆழமாக வேரூன்றி உள்ளது.
சனாதனம் பெயரை மாற்றுவதால், ஒருவரின் உள்நோக்கத்தையோ, குணத்தையோ மறைக்க முடியாது.
காங்கிரஸ் கட்சியும், அதன் நண்பர்களும், பாரதத்தின் ஆன்மா, உணர்வு மற்றும் வேர்களைத் திட்டமிட்டே களங்கப்படுத்தி வருகிறார்கள். இதனை நாட்டு மக்கள் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.
சனாதனம் முடிவில்லாதது, உண்மையானது. இது வெறுப்பு பேச்சை விதிப்பவர்களுக்கு புரியும் காலம் வெகுதொலைவில் இல்லை என தெரிவித்துள்ளார்.