தமிழகத்தில் ஒமைக்ரானின் உட்பிரிவான எக்ஸ்பிபி வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த 2 புதிய கரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, உலம் முழுவதும் பரவி, 2020-ம் ஆண்டு இந்தியாவுக்குள்ளும் தடம் பதித்தது. 3 அலைகளாக பரவிய கொரோனா வைரஸ், ஆல்பா, டெல்டா வகைக்கு பிறகு, ஒமைக்ரான் தொற்றாக உருமாற்றம் அடைந்தது. இது அதிவேக பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், பல லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகினர்.
இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸில் இருந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் எக்ஸ்பிபிஎனும் புதிய வகை வைரஸ் உருவானது. அதுமுதல், ஜனவரி மாதம் வரை இந்த வைரஸ் தொற்றால், 21,979 பேர் பாதிக்கப்பட்டனர்.
பொது சுகாதாரத்துறை மரபணு பகுப்பாய்வு கூடத்தில், கொரோனா உருமாற்றம் தொடர்பான மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில், கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் 2023 ஜனவரி வரை 2,085 பேரின் சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 420 மாதிரிகளில் எக்ஸ்பிபி வகை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதில் 98 மாதிரிகள் விரிவான நுண் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வில் உலகில் இதுவரை எங்கும் கண்டறியப்படாத, 2 புதிய கொரோனா உருமாற்றங்களை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இது தொடர்பான ஆய்வுக் கட்டுரையைப் பொது சுகாதாரத்துறை சமர்ப்பித்தது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியிலும் நடப்பாண்டு தொடக்கத்திலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 81 சதவீதம் பேர் தடுப்பூசிகளை முறையாக செலுத்தியவர்கள். இவர்களில் தீவிர கரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இது கொரோனா வைரசை போல் வீரியமிக்கது அல்ல. ரொம்ப சாதுவாகத்தான் இருக்கிறது. இது தாக்குபவர்கள் உடல்வலி, காய்ச்சல் என்று ஓரிரு நாட்கள் புரட்டி எடுத்து விடுகிறது. ஆபத்து எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.