விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் குடிநீரில் மர்ம நபர்கள் சாணத்தைக் கலந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டி ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவர்களுக்கு, வழக்கம்போல், காலை சிற்றுண்டி தயார் செய்ய வேண்டும் என்பதால், பள்ளியில் உள்ள சமையல் கூடத்தில் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்தவர்கள் அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உணவு தயாரிப்பதற்காக குடிநீர் தொட்டியை திறந்து பார்த்தபோது, தொட்டியில் உள்ள குடிநீரில் ஒருவித துர்நாற்றம் அடித்துள்ளது. அதை முழுவதுமாக ஆய்வு செய்தபோது, அதில் மர்ம நபர்கள் யாரோ, சாணம் கலந்திருப்பது தெரிய வந்தது.
இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த சுய உதவிக் குழுவினர், இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர், தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி, தொட்டியை சுத்தம் செய்தனர்.
இதனால், காலை சிற்றுண்டி செய்யும் பணி மிகவும் தாமதமானது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
அதேபோல, அடுத்த நாளும், பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில், மர்ம நபர்கள் சாணம் கலந்தது கண்டு அப்பகுதி மக்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு, முன்னர், பதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்த நிலையில், தற்போது, மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் தண்ணீரில் சாணத்தைக் கலந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்களிலும் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் திமுக அரசு திணறி வருகிறது என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.