‘சனாதன தர்மம்’ குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியதற்காக, தமிழக அமைச்சரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வினீத் ஜிண்டால், தாம் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர் என்றும், உதயநிதி ஸ்டாலினின் வெறுப்புப் பேச்சுக்களால் வேதனைப்படுவதாகவும் மனு தாக்கல் செய்துள்ளார்.
திமுக தலைவர் மீது தண்டனை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி காவல் துறை ஆணையாளரிடம், விண்ணப்பதாரர் ஏற்கனவே புகார் அளித்துள்ளதாகவும் ஆனால் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ஆர்.கே.சௌத்ரி மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அமல்படுத்தாத டெல்லி காவல்துறைக்கு எதிராக அவமதிப்பு கோரப்பட்டுள்ளது. சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.