இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஆகியவற்றை முன்னிட்டு 2 மாதசூங்களுக்கு 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்டத் தலைவரும், ஆன்மீகவாதியுமான முத்துராமலிங்க தேவர் 1908-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந் தேதி பிறந்து 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி மறைந்தார். இதற்காக அக்டோபர் 30-ந் தேதி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடத்தப்படுகிறது.
அதேபோல், ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி சிறைக்குச் சென்றவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காகத் தனது இராணுவப் பணியைத் துறந்தவருமான இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினம் வருகிற 11-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இராமநாதபுரத்தில் அதிகளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால், அசம்பாவிதச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாளை முதல் அக்டோபர் 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால் மாவட்டத்தில் நாளை முதல் 15-ந் தேதி வரையும், அக்டோபர் 25-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையும் வெளிவட்டங்களில் இருந்து இராமநாதபுரம் மாவட்டத்துக்கு வாடகை வாகனங்களில் தலைவர்களின் நினைவு நாள், பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கு மரியாதை செலுத்த வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சொந்த வாகனங்களில் வருவோர் அந்தந்த டிஎஸ்பி அலுவலகங்களின் வாகன அனுமதி சீட்டு பெற்றுவர வேண்டும்.
மேலும், வாகனங்களில் ஒலிபெருக்கிகள், பேனர் உள்ளிட்டவற்றைக் கட்டிக் கொண்டு வரவும், பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தவும், பொது இடங்களில் 5 பேர் மற்றும் அதற்கு மேற்பட்டோர் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.