ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இடம் பெற்றுள்ள ஹரியானாவைச் சேர்ந்த தீபிகா, ஒரு பெரிய தொடருக்குச் செல்வது இதுவே முதல் முறை என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் வரும் 23-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை நடக்கிறது. இதில், ஹாக்கி விளையாட்டில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி அடுத்தாண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும்.
இந்த சூழலில், இந்தியப் பெண்கள் ஹாக்கி அணியில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை தீபிகா இடம்பெற்றுள்ளார். அணியில் இடம்பெற்றது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். “அணியில் இடம்பெற எல்லோரும் போட்டியிட்ட நிலையில், நான் இடம் பெறுவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை.
மேலும், நான் ஒரு பெரிய தொடருக்குச் செல்வது இதுவே முதல் முறை. இதனால் முதலில் கொஞ்சம் பதட்டமடைந்தேன். ஆனால், தலைமைப் பயிற்சியாளர் ஸ்கோப்மேன் மற்றும் மூத்த வீரர்கள் என்னை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தனர்” என்று கூறியிருக்கிறார்.