ஜி20 மாநாட்டை நடத்துவதில் இந்தியா மிகுந்த மகிழ்ச்சியடைகிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “வசுதைவ குடும்பகம்” என்ற கருப்பொருளை மையமாக வைத்து ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்கி இருக்கிறது என்று பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.
தற்போது, ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. இதையடுத்து, ஜி20 அமைப்பின் வணிகப் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளின் உச்சி மாநாடு, நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த சூழலில், ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தேசியத் தலைநகர் டெல்லியில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது.
இம்மாநாட்டில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 40 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். ஆகவே, தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஜி20 உச்சி மாநாடு நடக்கும் பாரத மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் மத்திய பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இதனிடையே, இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அர்ஜென்டினா அதிபர் ஆல்பெர்டோ பெர்னான்டஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஆப்பிரிக்க யூனியன் தலைவர் அசோலி அசோமானி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இன்று டெல்லியை வந்தடைந்து விட்டனர்.
இந்த நிலையில், ஜி20 மாநாடு நடக்கும் பாரத் மண்டபத்தில் சிறப்பு பூஜைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜி20 மாநாட்டை முதல் முறையாக இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. டெல்லியிலுள்ள பாரத மண்டபத்தில் வரும் 9, 10-ம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. அடுத்த 2 நாட்களுக்கு உலக நாடுகளின் தலைவர்களுடன் மிகவும் ஆரோக்கியமான உரையாடல் இருக்கும் என நான் நம்புகிறேன்.
டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாடு மனிதத்தை மையப்படுத்தியதாகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாகவும் அமையும் என்று நான் நம்புகிறேன். நமது கலாச்சார பண்பாட்டில் வேரூன்றி இருக்கும் ‘வசுதைவ குடும்பகம்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்கி இருக்கிறது.
ஒரே நாடு, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பது முழு உலகமும் ஒரே குடும்பம் என்கிற நமது உலக கண்ணோட்டத்துடன் ஆழமாக எதிரொலிக்கிறது. நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த நான் சில நாட்டுத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். இந்தியாவின் விருந்தோம்பலால் நம் விருந்தினர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.