அரக்கோணம் தொகுதி திமுக எம்பியாக உள்ள ஜெகத்ரட்சகன் ரூ.1,700 கோடி முறைகேடு புகார் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் டாவ்சன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அரக்கோணம் தொகுதி திமுக எம்பியாக இருப்பவர் ஜெகத்ரட்சகன். இவர், தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளிலும், பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்.
இதனிடையே, சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு பிரபல தோல் தொழிற்சாலை இயங்கி வந்ததது. அதன் பங்குகளை, திமுக எம்பி ஜெகத்ரட்சகன் முறைகேடாக வாங்கியுள்ளார். அப்படி வாங்கப்பட்ட இடத்தை, வீட்டு மனைகள் மற்றும் லேஅவுட்டாக மாற்றியுள்ளார்.
இதன் மூலம், அந்த இடத்தை 1, 700 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடாக விற்பனை செய்துள்ளார் என்று, திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீது டாவ்சன் என்பவர் புகார் அளித்தார்.
அதன்பேரில், சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே, தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், தன் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும், திமுக எம்பி ஜெகத்ரட்சகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மனுவை ஏற்று, அவர் மீதான அனைத்து வழக்குகளையும் கடந்த நவம்பர் மாதம் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் டாவ்சன் என்பவர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் உடனே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தனது மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.