பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஷ்வர் கோவிலில் நடந்த பஸ்ம ஆரத்தியில் பெற்றோருடன் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தார்.
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மகாகாலேஷ்வர் கோவிலில் இன்று ‘பஸ்ம ஆரத்தி’ நடைபெற்றது. பஸ்ம ஆரத்தி என்பது இங்கு மிகவும் பிரபலமான சடங்காகும். இதில், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது பெற்றோருடன் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தார்.
கோவிலில் காலை 7:30 மணிக்கு நடந்த பாபா மகாகலின் ஆரத்தியிலும் அவர் கலந்து கொண்டார். விழாவையொட்டி, கோவிலின் நந்தி மடத்தில் அமர்ந்து சுவாமியை வழிபட்ட பிறகு, பூசாரி சஞ்சய் குரு பூஜை வழிபாடுகளை செய்தார். பிறகு, மகாகால் கோவில் நிர்வாகம் சாய்னா நேவாலுக்கு பாபா மகாகாலின் புகைப்படம் மற்றும் பிரசாதம் வழங்கி கவுரவித்தது .
இதுகுறித்து சாய்னா நேவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” சிறு வயதில் இருந்தே நான் கடவுள் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்யும்போது மனம் அமைதியாக உள்ளது.
இன்று நான் எனது பெற்றோருடன் இக்கோவிலுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கால் முட்டியில் சிறிது வலி இருப்பதால் தற்போது விளையாட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.
எனினும், மீண்டும் விளையாட முயற்சி செய்கிறேன். அரசியலைப் பொறுத்தவரை, இப்போது வரப்போவது இல்லை. எனது விளையாட்டில் கவனம் செலுத்த விரும்புகிறேன். இப்போது நான் இருக்கும் இந்த இடமே எனக்கு பிடித்ததாக உள்ளது. அதேசமயம், வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது” என்றார்.
முன்னதாக, இன்று அதிகாலை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ஆகியோரும் உஜ்ஜைனிக்குச் சென்று பாபா மகாகாலுக்கு பிரார்த்தனைச் செய்து, பஸ்ம ஆரத்தியிலும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.