ஆதார் அட்டைப் பெற்று 10 வருடம் நிறைவு செய்தவர்கள், அதை இலவசமாக இந்த ஆண்டு டிசம்பர் 14 -ம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அறிவித்துள்ளது.
ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளமாகும். இதனை இந்திய அரசின் சார்பில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் , ஒவ்வொரு தனிநபர்களுக்கும் வழங்கி வருகிறது.
ஆதார் அட்டை இந்தியாவில் வசிப்பதற்காகன அடையாளம் மற்றும் முகவரிக்கானச் சான்றாகக் கருதப்படுகிறது. ஒரு தனிநபருக்கு ஒரே ஒரு தனித்துவமான ஆதார் எண் மட்டுமே வழங்கப்படும். அப்படி வழங்கப்படும் ஒவ்வொரு ஆதார் எண்ணும் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும்.
ஒவ்வொருவரின் ஆதார் அட்டையிலும் 12 இலக்க தனித்துவமான அடையாள எண் உள்ளது. இதில், குடியிருப்பு முகவரி, புகைப்படம், கருவிழி, கைரேகைகள் ஸ்கேன் செய்யப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு துவங்கவும், புதிய பாஸ்போர்ட் விண்ணப்பிக்கவும், இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும் மற்றும் அரசின் அனைத்து பயன்பாட்டிற்கும் ஆதார் எண் பயன்படுகிறது.
ஆதார் அட்டை பெற்று 10 வருடம் ஆனவர்கள் ஆதார் அட்டையை புதுபிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான கடைசி தேதியும் நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, ஆதாரில் உள்ள ஆவணங்களைப் புதுப்பிக்கும் கடைசி தேதியை செப்டம்பர் 14 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புது அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதில், ஆதார் அட்டை பெற்று 10 வருடம் நிறைவு செய்தவர்கள், அதை இலவசமாக இந்த ஆண்டு டிசம்பர் 14 -ம் தேதி வரைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.