தமிழகத்தில் புதிய மின் இணைப்பிற்காக விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பு காற்றில் பறக்கவிட்டு, புதிய மின் இணைப்பு பெற இதுவரை 2 லட்சம் பேர் காத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின் விநியோக விதிகளில், தமிழ்நாடு மின்சாரம் ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது பல்வேறு புதிய திருத்தங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் ஆரம்பத்தில் புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த 7 நாட்களுக்குள்ளாகவே புதிய மின் இணைப்பு நிச்சயமாக வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த விதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
புதிய மின் இணைப்பு கேட்டு தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சம் பேர் காத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, புதிய மின் இணைப்புப் பெற விரும்புவர்கள், தங்களது விருப்பத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன், மின்சாரத்துறையின் இணையத்தில் விண்ணபிக்க வேண்டும். அதை அதிகாரிகள் பரிசீலனை செய்து புதிய இணைப்பு வழங்குவது நடைமுறையில் உள்ளது.
இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட நுகர்வோர் சிலர், பேசியபோது, புதிய மின் இணைப்பு வேண்டும் என மின்துறை இணையத்தில் குறிப்பிட்டவாறு பூர்த்தி செய்தாலும், புதிய மின் இணைப்பு கிடைப்பதில்லை.
கேட்டால், மீட்டர் இல்லை அல்லது கம்பத்தில் பழுது என பல்வேறுக் காரணங்களைச் சொல்கின்றனர். இது தொடர்பாக, மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளரிடம் கேட்டால், அப்படி ஏதும் இல்லை என தெரிவிக்கிறார்கள்.
லஞ்சம் கொடுத்தால், உடனே புதிய இணைப்பு வழங்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே, லஞ்சம் இல்லாமல், புதிய இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.