இரசிகர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு, 4 லட்சம் டிக்கெட்கள் கூடுதலாக வழங்க பி.சி.சி.ஐ. முடிவு செய்திருக்கிறது.
50 ஓவர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கிறது. இப்போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட 10 அணிகள் கலந்துகொள்கின்றன. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – நியூசிலாந்து மோதும் போட்டி அக்டோபர் 5-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்தாண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு கூடுதலாக 4 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய பி.சி.சி.ஐ. முடிவு செய்திருக்கிறது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ. தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உலகக் கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளுக்கான டிக்கெட் தேவை அதிகரித்திருக்கிறது. டிக்கெட்டுக்கள் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்து விடுகின்றன. இதனால், இரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும், ஐ.சி.சி. உலகக் கோப்பை 2023-ம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ டிக்கெட் பார்ட்னரான புக் மை ஷோ (BookMyShow) அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதில் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது இரசிகர்கள் சில சிரமங்களை எதிர்கொண்டனர். இதுகுறித்து இரசிகர்கள் புகார் கொடுத்தனர்.
ஆகவே, இரசிகர்களின் கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது 4 லட்சம் டிக்கெட்டுகளை கூடுதலாக வழங்க பி.சி.சி.ஐ. முன்வந்திருக்கிறது. உலகக் கோப்பைத் தொடரில் இந்தியப் போட்டிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால், இரசிகர்களுக்கு இடமளிக்க 4 லட்சம் கூடுதல் டிக்கெட்டுகளை விநியோகம் செய்யப்படவிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.