சுட்டெரிக்கும் வெயிலில், பாஜக பெண் கவுன்சிலர் ஒருவர் உண்ணாவிரதம் இருந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகோட்டையில் 9 -வது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுமித்ரா ரகுபதி.
இவர் பதவியேற்று மூன்று வருடங்களாகியும், இவர் வெற்றி பெற்ற பகுதிக்கு நலத்திட்ட பணிகள் ஏதும் செய்யவிடாமல், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, கடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணி, ஒதுக்குவதாகக் கூறி, கையொப்பம் பெற்றுக் கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா ஆகியோர் பணி வழங்கவில்லை என புகார் கூறப்படுகிறது.
இதேபோல, வேறு ஒரு வார்டு கவுன்சிலரிடமும், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் கையொப்பம் பெற்றுக் கொண்டு, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் பணி வழங்கவில்லையாம்.
இதனால், ஆவேசம் அடைந்த பாஜக பெண் கவுன்சிலர் சுட்டெரிக்கும் வெயிலில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், 9-வது வார்டு ஒன்றிய பாஜக கவுன்சிலர் சுமித்ரா ரகுபதியிடம், இனி வரும் காலத்தில் முறையாகவும், சரியான நேரத்திலும் பணி வழங்குவதாக உறுதியளித்தனர். இதனையடுத்து, போராட்டத்தைத் தற்காலிமாக விலகிக்கொண்டார்.