சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை, உயர் மட்ட பாலத்தில், ஒரு பகுதி இரட்டை தளமாக அமைக்கும் பணி ஒரு மாதத்தில் தொடங்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2009 -ம் ஆண்டு, சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், கூவம் ஆற்றில் தூண்கள் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதால் இப்பணிகள் தாமதமானது.
கடந்த 2021-ம் ஆண்டு உயர்மட்ட சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுகக் கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றிக்கிடையே ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த உயர் மட்ட பறக்கும் சாலை, இரண்டு அடுக்கு கொண்டதாகும். ரூ.5,721.33 கோடி மதிப்பீட்டில், மேம்பால பணிகள் 4 பகுதிகளாகப் பிரித்து செயல்படுத்தப்படும். மேம்பாலத்தின் மொத்த நீளம் 20.565 கி.மீ. ஆகும்.
இந்த மேம்பாலம் துறைமுக வளாகத்தில் தொடங்கி, கோயம்பேடு வரை செல்கிறது. பின்னர், தற்போதைய பூந்தமல்லி நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படும்.
துறைமுகத்தை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மேலே உள்ள பாலத்தில் செல்லும். சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம் வழியாக மேம்பாலம் செல்லும். இதில், மொத்தம் 13 பகுதிகளில் உள்ளே நுழைவும், வெளியேறவும் முடியும்.
இந்த திட்டத்திற்குச் சுற்றுச்சூழல், இரயில்வே துறை, கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை, உயர் மட்ட பாலத்தில், ஒரு பகுதி இரட்டை தளமாக அமைக்கும் பணி ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் முழு வடிவம் பெறும்போது சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே போக்குவரத்துப் பிரச்சினை அடியோடு தீரும்.