திமுக சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட, திமுக எம்பி ஆ.ராசா, மாற்றுத்திறனாளிகள் மற்றும் எச்ஐவி நோயாளிகளை அவமானப்படுத்தும் வகையில் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
திமுக சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட திமுக எம்பி ஆ.ராசா, சனாதன தர்மத்தை எச்ஐவி மற்றும் தொழுநோயுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
அதாவது, எங்களைப் பொறுத்தவரை எச்ஐவி மற்றும் தொழுநோயைப் போல சமூக அவலம் நிறைந்த ஒரு நோயாகவே சனாதனத்தைப் பார்க்கிறோம் என பேசினார். ஆ. ராசாவின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் நலசங்கத்தின் நிர்வாகி நிகிதா சாரா என்பவர், ஆ.ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தொழுநோய் உள்ளிட்ட முக்கியத் தலைப்புகளைப் பற்றிப் பேசும்போது, மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் மிகுந்த கவனத்துடன் வேண்டும், கண்ணியத்துடனும், பொறுப்புடனும் பேச வேண்டும்.
ஒவ்வொருவரின் பேச்சும், மக்களிடம் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். ஆ.ராசாவின் பேச்சும், கருத்தும் எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.
எனவே, ஆ.ராசா, தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது வாபஸ் பெற வேண்டும். மேலும், தனது பேச்சுக்காக பொதுவெளியில் ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல, மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான தேசிய அனைத்துப் பொதுச் செயலாளர் முரளிதரன் பேசுகையில், ஆ.ராசாவின் பேச்சு துரதிருஷ்டவசமானது. எச்ஐவி மற்றும் தொழுநோயை இழிவான முறையில் பேசியதை ஏற்க முடியாது, மன்னிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஆ.ராசாவின் மீது டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக, திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர், சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதும், அதன் காரணமாக அவர்கள் மீது, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்வதும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருவதும் தொடர்கதையாகி வருகிறது.