கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில், எண்ணும் எழுத்தும் பாடத்திட்டத்தில், வகுப்பறை செயல்பாடுகளைக் கண்காணித்து, ஆய்வு செய்ய, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதற்கு, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவலுக்குப் பின்னர், மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில், கொண்டுவரப்பட்ட திட்டம்தான் எண்ணும் எழுத்தும். நடப்பாண்டு முதல் இத்திட்டம் 5-ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வரும் 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்கு உட்பட்டோர், பிழையின்றி எழுதுதல், வாசித்தல், அடிப்படை கணக்குகளைத் தெரிந்து வைத்தல் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதில், பாடத்திட்டத்திற்கு ஏற்ப துணைக் கருவிகள் தயாரித்தல், ஆன்லனில் வகுப்புகள் நடத்துதல் போன்றவைகளுக்கு, ஆரம்பத்திலேயே தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த நிலையில், தற்போது மூன்றாம் நபர் மதிப்பீட்டு முறையில், வகுப்பறை செயல்பாடுகள் அறிய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு மாவட்டத்திலும் 135 பள்ளிகளில், தலா ஒரு முதுகலை ஆசிரியர் தலைமையில், பிஎட். படிக்கும் மாணவர்களைக் கொண்டு, வகுப்பறை செயல்பாடுகள் ஆய்வு செய்ய தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, வரும் 15 -ம் தேதிக்குள், மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதித்து, செயலியில் பதிவேற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தி.மு.க. அரசின் இந்த உத்தரவுக்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. மாணவர்கள், ஆசிரியர்களின் வகுப்பறை செயல்பாடுகளை ஆய்வு செய்வது ஏற்புடைய செயல் அல்ல. இந்த நிலை தொடர்ந்தால் மாநிலம் தழுவிய போராட்டம் வெடிக்கும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.