சமரச தீர்வு என்பது, மகாபாரதம், ராமாயணம் காலங்களிலேயே இருந்துள்ளது. சமரச முயற்சிகள் தோல்வி அடைந்ததால்தான், மகாபாரத மற்றும் ராமாயண போர்கள் நடைபெற்றன. எனவே, சமரசத் தீர்வு என்பது சிறந்த தீர்வு என்று, உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு சமரசத் தீர்வு மையத்திற்கு புதிய கட்டடம் திறப்பு விழா மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 120 தாலுக்காக்களில் துணை சமரசத் தீர்வு மைய புது கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சமரசத் தீர்வு மைய புதிய கட்டடம் மற்றும் துணை சமரசத் தீர்வு மைய புது கட்டடத்தை, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.கே.கவுல் தொடங்கி வைத்தார்.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், “நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தவருக்கு, தான் என்ன செய்ய விரும்புகிறோம் என தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. ஆனால், சமரச மையங்களில் அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும், அதற்குத் தீர்வு காண சட்டத்தில் இடம் உள்ளது. இருப்பினும், அதனைச் சட்டவிதிகளின்படியே செய்ய முடியும். சமரசத் தீர்வு என்பது ஒரு சிறந்த நடைமுறை. இங்கு, குடும்பப் பிரச்சனைகள் மட்டுமல்லாது, வணிக ரீதியிலான பிரச்சனைகளையும் தீர்க்க முடியும். சமரசத் தீர்வு மையத்தை உருவாக்குவதில் சென்னை உயர் நீதிமன்றம் முன்னணியில் உள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி எம்.எம்.சுரேந்தரேஷ், “சமரசத் தீர்வு என்பது, மகாபாரதம், ராமாயணம் காலங்களிலேயே இருந்துள்ளது. சமரச முயற்சிகள் தோல்வி அடைந்ததால்தான், மகாபாரத மற்றும் ராமாயண போர்கள் நடைபெற்றன. எனவே, சமரசத் தீர்வு என்பது சிறந்த தீர்வு” என்றார்.
அடுத்து பேசிய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூர்வாலா, “நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதல் சமரச தீர்வு மையம் துவங்கப்பட்டுள்ளது. இது கடந்த 2005-ம் ஆண்டு விதைக்கப்பட்ட விதையாகும். இப்போதுதான் பலன் கொடுத்துள்ளது. இந்த மையங்கள் மூலம் ஏழைகளின் நலனை மீட்டெடுக்க வேண்டும்” என்றார்.