குத்துச்சண்டை போட்டியில் மஞ்சு ராணி தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்து. இதன் மூலம் இந்தியா மொத்தம் 10 பதகங்களுடன் உள்ளது.
போஸ்னியாவின் சரஜேவோவில் 21-வது முஸ்தபா ஹஜ்ருலஹோவிக் நினைவு குத்துச்சண்டைப் போட்டி நடைபெற்றது. இதில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் மஞ்சு ராணி தங்கப் பதக்கத்தை வென்றார். ஏற்கனவே இந்தியா 9 பதக்கங்களை வென்றிருந்த நிலையில், மஞ்சு ராணியும் பதக்கம் வென்றதால் இந்தியாவுக்கு மொத்தம் 10 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
குத்துச்சண்டை 50 கிலோ பிரிவில் பங்கேற்ற மஞ்சு ராணி ஆப்கானிஸ்தான் வீராங்கனை சாடியா ப்ரோமண் உடன் மோதினர். இதில், மஞ்சு ராணி 3-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று தங்க பதக்கம் வென்றது மட்டுமில்லாமல், சிறந்த பெண்கள் குத்துச்சண்டை வீராங்கனை என்ற பட்டத்தையும் வென்றார்.
அதேபோல, ஆண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில், பருன் சிங் ஷகோல்ஷெம், போலந்தின் ஜக்குப் ஸ்லோமின்ஸ்கை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து வெற்றியை உறுதி செய்தார். ஆண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவில், மணீஷ் கௌசிக் தனது ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி, பாலஸ்தீனத்தின் முகமது சவுட்டை 3-0 என்ற கணக்கில் அபாரமாக வென்றார்.
ஆண்களுக்கான 92 கிலோ எடைப்பிரிவில் நவீன் குமார் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் போலந்தின் மேட்யூஸ் பெரெஸ்னிக்கியை வீழ்த்தி வெற்றி பெற்றார். குத்துச்சண்டை வீரர்கள் ஜோதி , ஷஷி , ஜிக்யாசா , வினாக்ஷி மற்றும் சதீஷ் குமார் ஆகியோருக்கு எதிராக எதிரணியினர் விளையாடாததால் இறுதிப் போட்டியில் இவர்களே வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.