ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, மழையால் இடைநிறுத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரிசர்வ் நாளான இன்று போட்டி தொடர்ந்து நடக்கிறது.
2023-ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இப்போட்டியின் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். பாகிஸ்தான் பந்துவீட்டை சுப்மன் கில் பௌண்டரிகளாக அடிக்க, ரோஹித் ஷர்மா சிக்ஸர்களாக அடித்து நொறுக்கினார். ரோஹித் சர்மா 6 பௌண்டரிகள் 4 சிக்ஸர்களை அடித்து 49 பந்துகளில் 56 ரன்களை எடுத்து ஷதாப் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக அடிக்கொண்டிருந்த சுப்மன் கில், 10 பௌண்டரிகளை அடித்து 52 பந்துகளில் 58 ரன்களை குவித்து அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். கே.எல்.ராகுல் 2 பௌண்டரிகளை அடித்து 28 பந்துகளில் 17 ரன்களுடனும், விராட் கோலி 16 பந்துகளில் 8 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இடைவிடாமல் மழை பெய்ததைத் தொடர்ந்து, ஆட்டம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. மழையால் ஆட்டம் பதித்ததால் “ரிசர்வ்” நாள் வைக்கப்படும் என்று கிரிக்கெட் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மீதமுள்ள ஆட்டம் இன்று நடைபெறும் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. வழக்கம்போல மாலை 3 மணியளவில் போட்டி தொடங்கும்.