உலகப்புகழ் பெற்ற பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா களைகட்டி வருகிறது.
உலகப்புகழ் பெற்ற பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சிவகங்கை மாவட்டத்தில், திருப்புத்தூர் – காரைக்குடி சாலையில் பிள்ளையார் பட்டி அமைந்துள்ளது.
கற்பக விநாயகர் திருக்கோவிலில் சதுர்த்தி பெருவிழா மிகப் பிரமாண்ட வகையில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடம், விநாயகர் சதுர்த்தி விழா, கடந்த 10 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளி வீதியுலா நடைபெறும்.
2-வது நாள் இரவு சிம்ம வாகனத்திலும், 3 -வது நாள் பூத வாகனத்திலும், 4 -வது நாள் இரவு கமல வாகனத்திலும், 5 -வது நாள் இரவு ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா நடைபெறும்.
6 -வது நாள் கஜமுக சூரசம்காரம் நடைபெறும். 7 -வது நாள் இரவு மயில்வாகனமும், 8 -வது நாள் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா நடைபெறும்.
9 -வது நாளான 19 -ம் தேதி அன்று, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சி தருவார். அன்றைய தினம் மாலை 4 மணியளவில் திருத்தேரோட்டம் நடைபெறும்.
10 -வது நாள் காலை திருக்கோவில் குளத்தில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டுச் சிறப்பு தீபாராதனை நடைபெறும். அன்று இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.
குறிப்பாக, விநாயக சதுர்த்தி அன்று விநாயகருக்கு 18 படி, முக்குறுணி என்ற அரிசியைக் கொண்டு, கொழுக்கட்டை தயாரிக்கப்படுவது வழக்கம்.
இதில், 18 படி அரிசி மாவு, 2 கிலோ எள், கடலைப்பருப்பு 6 படி, தேங்காய் 50, பசுநெய் 1 படி, வெல்லம், ஏலக்காய் முதலியன கொண்டு பிரசாதம் தயாரித்து விநாயகருக்குப் படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படும்.