டெல்லி பிரகடனம் அனைத்து நாடுகளின் ஒருமித்த கருத்தைப் பெற வேண்டும் என்பதற்காக, இந்திய தூதர்கள் குழு 300 முறை சந்திப்பு நடத்தி, 200 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக, ஜி20 ஷெர்பா அமிதாப் கந்த் புதிய தகவலை தெரிவித்திருக்கிறார்.
இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு, டெல்லியில் கடந்த 2 நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. இம்மாநாட்டின் சிறப்பம்சமே, வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜி20 டெல்லி பிரகடனம், அனைத்து நாடுகளும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதுதான். ஆனால், இதற்குப் பின்னணியில் எவ்வளவு சிரமங்களும், சிக்கல்களும் ஏற்பட்டிருக்கிறது என்பது தற்போது தெரியவந்திருக்கிறது.
அதாவது, டெல்லி பிரகடனத்தில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்களில் உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பானது. உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைத்து, அந்நாட்டில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் ரஷ்யா, சீனாவுக்கு ஆதரவானர்களுக்கும், எதிரானவர்களுக்கு இடையே கருத்து முரண்பாடுகள் இருந்தன.
எனவே, டெல்லி பிரகடனத்தை அனைத்து நாடுகளும் ஏகமனதாக ஏற்றுக்கொள்வதில் சிக்கல் நிலவி இருக்கிறது. இதையடுத்து, இந்திய தூதர்கள் குழு இரு தரப்பினரையும் 300 முறை சந்தித்து 200 மணிநேரம் இடைவிடாத பேச்சுவார்த்தை நடத்தி, 15 வரைவுகளை வெளியிட்டு, சிக்கலை தீர்த்து வைத்திருப்பது தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து ஜி20 உச்சி மாநாட்டின் ஷெர்பா அமிதாப் கந்த் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஜி20 மாநாட்டில் மிகவும் சிக்கலான பகுதி என்பது ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரம். இத்தகைய புவிசார் அரசியல் ஒருமித்த கருத்தைக் கொண்டுவருவது மிகவும் சிக்கலானது.
இதனை சாத்தியப்படுத்த, 300 இரு தரப்பு சந்திப்புகள் நடத்தப்பட்டு, 200 மணிநேரம் இடைவிடாத பேச்சுவார்த்தை நடத்தி, 15 வரைவுகள் வெளியிடப்பட்டன. இதன் விளைவாகவே, உச்சி மாநாட்டின் முதல் நாளிலேயே ஒருமித்த கருத்து ஏற்பட வழிவகுத்தது” என்று தெரிவித்திருக்கிறார். மேலும், இதற்கு ஜி20 உச்சி மாநாட்டின் இணைச் செயலாளர்கள் ஈனம் கம்பீர், கே.நாகராஜ் நாயுடு ஆகியோர் உதவியாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இப்பதிவுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் அமிதாப் கந்தை டேக் செய்து பதிலளித்திருக்கும் சசிதரூர், “மிகவும் சிறப்பாக செயல்பட்டீர்கள் அமிதாப் கந்த். வாழ்த்துக்கள்! நீங்கள் சிவில் சேவைக்கான தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய வெளியுறவு துறை (ஐ.எஃப்.எஸ்.) பணிக்கு பதில் இந்திய ஆட்சிப் பணியை (ஐ.ஏ.எஸ்.) தேர்வு செய்ததன் மூலம், ஐ.எஃப்.எஸ். ஒரு திறமையான அதிகாரியை இழந்து விட்டது. இந்தியாவிற்கு ஜி20 மாநாட்டில் இது ஒரு அற்புதமான தருணம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.