கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் செயல்பாடுகள் தீவிரமாக இருந்துவரும் நிலையில், ஒரு சிலரின் தீய செயல்களை ஒட்டுமொத்த சமூகத்தின் கருத்தாகக் கொள்ள முடியாது என்று கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருக்கிறார்.
வட இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களுக்கென “காலிஸ்தான்” தனி நாடு கேட்டு பிரிவினைவாதிகள் போராடத் தொடங்கினர். இப்போராட்டம் 1980-களில் தீவிரமடைந்தது. எனினும், மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளால் இந்தியாவில் இந்த அமைப்பு நசுக்கப்பட்டது. அதேசமயம், சில வெளி நாடுகளில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தங்கள் பிரச்சாரத்தை தொடர்ந்து வருகின்றனர். குறிப்பாக, கனடா நாட்டில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் செயல்பாடு சமீபகாலமாக தீவிரமடைந்திருக்கிறது.
இந்த நிலையில், டெல்லியில் நடந்த ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்திருந்தார். அவரிடம் கனடாவில் அதிகரித்துள்ள இந்தியர்களுக்கு எதிரான காலிஸ்தான் செயல்பாடுகள் குறித்தும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடுவது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கனடா பிரதமர், “இந்த 2 விஷயங்கள் குறித்து நானும், உங்கள் பிரதமர் நரேந்திர மோடியும் சில வருடங்களாக பேசி வருகிறோம்.
கருத்து சுதந்திரம் மற்றும் அமைதிவழி போராட்டத்திற்கான சுதந்திரம், எங்களுக்கு முக்கியமானது. அதேசமயம், வெறுப்புணர்விற்கும், வன்முறைக்கும் நாங்கள் எதிரானவர்கள். அவற்றை எதிர்க்க நாங்கள் எப்போதும் முன்நிற்போம். ஒரு சமூகத்தைச் (சீக்கிய) சேர்ந்த சிலரின் நடவடிக்கை ஒரு ஒட்டு மொத்த சமூகத்தையோ அல்லது ஒரு நாட்டையோ (கனடா) குறிப்பதாக பொருளில்லை. ஒரு நாட்டின் சட்டதிட்டங்களை மதிப்பதன் அவசியம் குறித்தும் நாங்கள் இருவரும் கருத்துக்கள் பரிமாறிக் கொண்டோம்” என்றார்.