1895-ம் ஆண்டு, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொலபா என்னும் குக்கிராமத்தில், நரஹரி சம்புராவ் – ருக்மிணிதேவி தம்பதியருக்கு, மகனாகப் பிறந்தார் ஆச்சார்ய வினோபா பாவே.
லௌகீக வாழ்வின்மீது ஈர்ப்புற்று மன அமைதி தேடி காசி, வங்கம் என மனம்போன போக்கில் சுற்றித் திரிந்தார். ஒருகட்டத்தில், ஆங்கிலேய அரசுக்கெதிராகப் போராடிக்கொண்டிருந்த கொரில்லா குழுக்களுடன் இணைந்து போராட முடிவுசெய்தவர், பின் காந்தியின் உரையைக் கேட்டு தன் முடிவை மாற்றிக்கொண்டார்.
காந்திக்கெழுதிய கடிதத்துக்குப் பதில் கிடைக்க, வங்கத்தில் இருந்து சபர்மதி ஆசிரமத்தை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கினார். தாம் தேடிய அமைதி அங்கு கிடைக்கவே, அங்கேயே தன் மிச்ச வாழ்க்கையைக் கழிக்கவும் முடிவு செய்தார்.
இறைவன்மீது கொண்ட பற்றின் காரணமாக துறவு வாழ்க்கையை மேற்கொள்ளவும் முடிவுசெய்தார். “என்னைவிட காந்தியத்தைச் சரியாகப் பின்பற்றுபவர், எனக்கு அவர் மாணவர் அல்லகுரு” என காந்தியால் போற்றப்பட்டவர், வினோபா பாவே.
சுதந்திர இந்தியாவில் காந்தியாரின் மரணத்துக்குப் பிறகு, வினோபா பாவேயின் வாழ்வு நிலச்சீர்திருத்தம் நோக்கி நகர்ந்தது. ஆந்திராவில் நிகழ்ந்த மிகப்பெரிய அரசு வன்முறைதான் அதற்குக் காரணமாக அமைந்தது. 1946-ல் தொடங்கி 1951 வரை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, நிலம் வேண்டி அரசுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த விவசாயிகளை ஆயுதங்கள்கொண்டு அடக்கியது மத்திய அரசு.
4,000-க்கும் அதிகமான விவசாயிகளைப் பலிகொடுத்த பின்னும் போராட்டம் ஓயவில்லை. வங்காளத்தில் பற்றியெரிந்த கலவரத்தைத் தன் உயிர்கொண்டு அணைத்த காந்தியாரைப்போல், ஒரு காந்தியனாக ஆந்திராவில் நிகழ்ந்த வன்முறைகள் பற்றிய உண்மை நிலையறிய பாதயாத்திரையை மேற்கொண்டார், வினோபா பாவே. ஒவ்வொரு கிராமமாகச் சென்று மக்களிடையே அஹிம்சையைப் போதித்துவந்தார், வினோபா பாவே. அப்படி ஒரு கிராமத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது வயதான முதியவர் ஒருவர் எழுப்பிய கேள்விதான், வினோபா பாவேவை ‘நிலப்பங்கீடு’ குறித்து சிந்திக்கவைத்தது.
வறுமையைப் போக்க நிலப்பகிர்வே சிறந்த வழி என வாழ்ந்த வினோபா பாவே 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி மறைத்தார்.