காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்சிறுணை பெருகல் கிராமத்தில், தொண்டை மண்டல வரலாற்று ஆய்வு சங்கத்தினர், பல்லவர் கால மூத்ததேவி சிற்பத்தையும்; சோழர் கால அய்யனார் எனப்படும், சாஸ்தா சிலையையும் அடையாளப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, தொண்டை மண்டல வரலாற்று ஆய்வு சங்க நிறுவன செயலர் ராதாபாலன் கூறியதாவது, ” காஞ்சிபுரம் அடுத்த கீழ்சிறுணை பெருகல் கிராமத்தில், நேற்று முன்தினம் கள ஆய்வு செய்தோம். அங்கு, செல்லியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் வயல்வெளிக்கு முன் உள்ள, துர்க்காத்தம்மன் கோவிலை ஆய்வு செய்தோம். அங்கு வழிபாட்டில் உள்ள, 7ம் நுாற்றாண்டை சேர்ந்த மணற்கல்லால் ஆன பழமையான சிலை ஒன்றை கண்டறிந்தோம். இது, தொன்மை வாய்ந்த மாந்தனும் மாந்தியும் இல்லாத, தனி மூத்ததேவி சிலை. காஞ்சியில், இதுபோன்ற சிலையை கண்டறிவது இதுவே முதல்முறை” என்று கூறினார்.
அழகிய உருவம், அமைதியான முகத்துடன் உள்ள இந்த சிலை, 4.5 அடி உயரமும், 2.5 அடி அகலமும் உள்ளது. பருத்த வயிற்றுடன் அமர்ந்த நிலையில், இவரின் தலையில் கரண்ட மகுடமும், காதில் குழைகளும் தரித்துள்ளது. பல்லவர்கள் ஆட்சி காலமான ஏழாம் நுாற்றாண்டில், தமிழர்களின் தாய் தெய்வமாக மூத்த தேவி வழிபாட்டில் இருந்து உள்ளார். நந்திவர்ம பல்லவ மன்னன், இதை, ‘தவ்வை’ எனும் பெயரில் குலதெய்வமாக கொண்டாடி உள்ளார்.
பல்லவர் காலத்தை போலவே, பிற்கால சோழர்கள் காலத்திலும், ‘சேட்டை’ என்ற பெயரில், தவ்வை வழிபாடு சிறப்புற்று இருந்ததாக, கல்வெட்டு சான்றுகள் கூறுகின்றன.