மொராக்கோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 3,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்த அதிர்ச்சியாக வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில், டேனியல் புயல் காரணமாக, 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லிபியா நாடு தெற்கு ஆப்பிரிக்காவில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளது. இந்நாட்டில் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. லிபியாவின் கிழக்குப் பகுதியைக் கிளர்ச்சியாளர்களும், மேற்கு பகுதியை வெளிநாட்டு ஆதரவு பெற்ற அரசும் நிர்வகித்து வருகின்றன.
இந்நிலையில், லிபியாவை டேனி புயல் தாக்கியுள்ளது. இதனால், லிபியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டெர்னா, பெடா, சுசா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதியில் லிபியா அமைந்துள்ளதால் புயலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. புயலின் காரணமாக, அப்பகுதியில் பலத்த காற்று வீசியதோடு, கனமழையும் கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக, அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் ஆயிரக்கணக்கானோர் சிக்கிக்கொண்டனர்.
இதனால், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டின் பிரதமர் ஒசாமா ஹமத் தெரிவித்துள்ளார். எனவே, உயிரிழப்புகள் மேலும், உயரம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த பேரழிவு காரணமாக, 3 நாட்கள் துக்கம் அனுசரித்து நாடு முழுவதும் தேசியக் கொடியை அரை கம்பத்தில் பறக்கவிட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.