தேச துரோக சட்டத்தை அரசியலமைப்பில் இருந்து நீக்கக்கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது. இப்பிரச்சனையை ஒத்திவைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
ஆங்கிலேயர் ஆட்சியில் 1890-ம் ஆண்டு தேச துரோக வழக்கு 124ஏ கொண்டுவரப்பட்டது. இந்த சட்டப் பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படுவதாக ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை கடந்தாண்டு மே மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், தேச துரோக வழக்கின் 124ஏ பிரிவை தொடர்வது குறித்து மறு ஆய்வு நடத்தும்படியும், அதுவரை இச்சட்டத்தின் கீழ் எந்த வழக்கும் பதிவு செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதன் பிறகு, கடந்த மே மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அச்சட்டப் பிரிவை திருத்துவது தொடர்பாக மறு ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றுகுப் பதிலாக புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த புதிய மசோதாக்களில் இருந்து சர்ச்சைக்குரிய தேசத் துரோகச் சட்டம் (ஐ.பி.சி.யின் பிரிவு 124 ஏ) ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம், அப்பிரிவுக்கு பதிலாக, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள் (சட்டப்பிரிவு 150) என்ற பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்த செயலை செய்தாலும் பேசினாலும், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று புதிய சட்டப்பிரிவு 150 கூறுகிறது.
இந்த நிலையில், தேச துரோத சட்டப் பிரிவை எதிர்க்கும் வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடாளுமன்றததில் புதிதாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மசோதைவை காரணம் காட்டிய மத்திய அரசின் உயர்மட்ட வழக்கறிஞர்கள், இந்த விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதனை நிராகரித்து விட்ட தலைமை நீதிபதி அமர்வு, மேற்கண்ட மனுக்களை 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.