தனக்குச் சொந்தமான 25 கோடி ரூபாய் சொத்தை அபகரித்த நபர் மீது சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பிரபல நடிகை கவுதமி புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்த நடிகை கவுதமி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் மகேஸ்வரியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில், நான், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளேன். எனது வருமானத்தில் ஸ்ரீபெரும்புதூரில் 46 ஏக்கர் நிலம் வாங்கினேன். தற்போது அந்த நிலத்தின் மதிப்பு 25 கோடி ரூபாய் ஆகும்.
நான், கடந்த 2004-ம் ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டேன். மேலும், எனது மகள் பாராமரிப்புச் செலவு உள்ளிட்டவற்றுக்காக இந்த நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன்.
அப்போது, அந்த நிலத்தை விலைக்கு விற்றுத்தருவதாகக் கூறிய, அழகப்பன் என்பவர், என்னிடம் பவர் வாங்கிக் கொண்டார். மேலும், சில பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.
இந்த நிலையில், அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர், எனது நிலத்தை அபகரித்து மோசடி செய்துவிட்டனர்.
இது பற்றி கேட்டால், எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, எனது நிலத்தை, அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து மீட்டுக் கொடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணையை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.