எல்லை சாலைகள் நிறுவனம் நிர்மாணித்த 2,941 கோடி ரூபாய் மதிப்பிலான 90 உட்கட்டமைப்பு திட்டங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஜம்மு காஷ்மீரில் எல்லை சாலை திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு இன்று நடந்தது. இதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீர் சென்றார். அவரை, விமான நிலையத்தில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வரவேற்றார். தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் பிஷ்னா-கவுல்பூர்-புல்பூர் சாலையில் உள்ள தேவக் பாலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜ்நாத் சிங், 22 சாலைகள், 63 பாலங்கள், அருணாச்சலப் பிரதேசத்தில் நெச்சிபு சுரங்கப்பாதை, மேற்கு வங்கத்தில் 2 விமானநிலையங்கள் மற்றும் 2 ஹெலிகாப்டர் தளங்களை ராஜ்நாத் சிங் ஆகியவற்றை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “உங்கள் உண்மையான சாதனை என்னவென்றால், உங்கள் முயற்சியால் கடினமான தோற்றத்தை நீங்கள் எளிதாக்கினீர்கள். நாட்டின் குடிமக்கள் எல்லைப் பகுதி வளர்ச்சியை ஒரு சாதனையாக எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டார்கள். காரணம், தற்போது அது அவர்களுக்கு சாதாரணமாகி விட்டது. ஒரு லட்சியத் திட்டத்தைத் தொடங்கி சரியான நேரத்தில் முடிப்பதே, புதிய இந்தியாவின் புதிய இயல்பு.
உங்கள் வேலை சாலைகளை அமைப்பதன் மூலம் ஒரு இடத்தை மற்றொரு இடத்துடன் இணைப்பது மட்டுமல்ல. உங்களின் செயல்களால் மக்களின் இதயங்களையும் இணைக்க வேண்டும். கட்டுமானமானது மக்களுக்கானதாகவும், மக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஆகவே, உங்களது திட்டத்தில் மக்களையும் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். மக்களுடன் தொடர்ந்து பேசுங்கள். அவர்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களிடமிருந்து உள்ளீட்டைப் பெறுங்கள். நீங்கள் இதைச் செய்தால், அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் வேலையும் எளிதாகிவிடும்.
இதுவரை நாங்கள் குறைந்தபட்ச முதலீடு மற்றும் அதிகபட்ச மதிப்பு என்ற மந்திரத்துடன் பணிபுரிந்தோம். ஆனால், தற்போது நாம் மேலும் செல்ல வேண்டும். தற்போது குறைந்தபட்ச சுற்றுச்சூழல் சீரழிவு, அதிகபட்ச தேசிய பாதுகாப்பு மற்றும் அதிகபட்ச நலன் என்ற மந்திரத்துடன் நாம் முன்னேற வேண்டும்” என்று கூறினார். இத்திட்டத்தில் 10 எல்லை மாநிலங்கள் மற்றும் வடக்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களின் யூனியன் பிரதேசங்களில் மேற்கண்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.