திமுக அமைச்சருக்கு இந்து தர்மத்தை ஒழிப்போம் என்ற மாநாட்டில் பங்கேற்க நேரம் இருக்கிறது, ஆனால் கல்விப் பணிக்கு நேரம் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இன்றைய தினம், என் மண் என் மக்கள் பயணம், 12 வருடங்களுக்கு ஒரு முறை குறிஞ்சி பூ பூத்து குலுங்கும் இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் ஆர்ப்பரிக்கும் மக்கள் சூழ இனிதே நடந்தேறியது.
தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், வாக்களித்த மக்களையும் கேலி செய்வது போல் பொறுப்பற்றுச் செயல்படும் ஊழல் திமுகவுக்கு, வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
மக்கள் நலனை முன்னிறுத்தி நல்லாட்சி தரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களை,…
— K.Annamalai (@annamalai_k) September 12, 2023
பழனி தண்டாயுதபாணி முருகப்பெருமான் சிலையைப் போலவே நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட சிலை, பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை. மூன்று ஆயிரம் ஆண்டுகள் புராண வரலாறு உடைய பழமையான சிறிய கோயில். இங்குள்ள கிரந்த எழுத்துக்களும் பழங்கால சிலை அழகும் தொன்மைக்குச் சான்றாக உள்ளது.
வான் இயற்பியல் துறையில் கடந்த 121 ஆண்டுகளாக பங்களித்து வரும் கொடைக்கானல் மண்; இந்த மாதம் 2ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலத்திலுள்ள 7 உபகரணங்களில், பிரதானமான விஇஎல்சி (விசிபில் எமிஷன் லைன் கொரோனாகிராப்) என்ற உபகரணம், அதற்கு, கொடைக்கானல் சூரிய உற்றறிவகத்தின் (அப்சர்வேட்டரி) சூரியக் கரும்புள்ளிகள் குறித்த 100ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஆய்வுத் தரவுகள் பேருதவியாக அமைந்துள்ளன.
கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 7,000 ஏக்கர் பரப்பில் மலைப்பூண்டு விளைவிக்கப்படுகிறது. கொடைக்கானல் மலை பூண்டுக்கு நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி, 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் புவிசார் குறியீடு வழங்கி கொடைக்கானலின் மலைப்பூண்டு சாகுபடியை ஊக்குவித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் 8.2 கோடி ரூபாய் பழங்குடியினருக்கு சிறப்பு நிதியாக வழங்கியுள்ளார். மேலும், பிரதம மந்திரி ஆதி ஆதர்ஷ் கிராம திட்டத்தின் கீழ், 2.85 கோடி ரூபாய், பழங்குடியினர் நலனுக்காக அரசியல் அமைப்பு சட்டம் 275 (1)ன் கீழ் வழங்கப்படும் நிதி: 64 கோடி ரூபாய், பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினருக்கு வழங்கப்படும் நிதி: 33 கோடி ரூபாய், பழங்குடியினர் நலனுக்காக வேலை செய்யும் அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட நிதி: 5 கோடி ரூபாய், அரசு சாரா பழங்குடி பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை: 11 கோடி ரூபாய், கல்லூரிகளில் பயிலும் பழங்குடி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகை: 132 கோடி ரூபாய். இப்படி கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 256 கோடி ரூபாய் நமது மத்திய அரசு தமிழகத்தில் பழங்குடியினர் நலனுக்காக வழங்கியுள்ளது.
மோடியின் முகவரி: கொடைக்கானல்
மத்திய அரசின் பழங்குடியினர் நலத்திட்டத்தில் பயன்பெற்ற செல்வம், மத்திய அரசின் Spice Board of India நிறுவனத்தின் மூலமாக உதவிபெற்று ஏலக்காய் தோட்டம் வைத்த பூதாயம்மாள், பிரதமரின் சிறு குறு உணவு பதப்படுத்துதல் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற திருமதி ரோகிணி, சுவநிதி திட்டத்தின் கீழ் பயன் பெற்ற ரூபி, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு பெற்ற திருமதி மேரி, மத்திய அரசின் Coffee board காபி விவசாயிகளுக்கு வழங்கும் 70% மானியம் மூலம் பயன்பெற்ற ராஜா, மகளிர் சுயஉதவி திட்டத்தில் 5 லட்ச மானியம் பெற்று சாக்லேட் தொழில் தொடங்கிய திருமதி பிரியா அவர்கள், உஜ்வாலா திட்டத்தில் 400 ரூபாய் மானியம் பெறும் இல்லத்தரசிகள். இவர்கள்தான் பாரதப் பிரதமர் மோடியின் முகவரி.
கொடைக்கானலுக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, கொடைக்கானலில் அடிப்படை கட்டமைப்பு வசதி, பல்நோக்கு மருத்துவமனை, பழனி கொடைக்கானல் இடையே ரோப்கார், அரசு ஆண்கள் கலைக் கல்லூரி; கடந்த 30 மாதங்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த கல்லூரிக்கு இடம் தேர்வு செய்து கொண்டிருக்கிறார்.
ஹிந்து தர்மத்தை ஒழிப்போம் என்ற மாநாட்டில் பங்கேற்க அவருக்கு நேரம் இருக்கிறது. கல்விப் பணிக்கு நேரம் இல்லை. இப்படி கொடுத்த எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றாமல் தற்போது 1 கோடி மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் என்று அறிவித்துள்ளது. தேர்தலுக்கு முன்பு அனைத்து மகளிருக்கும் என்று சொன்னார்கள். இப்போது தமிழகத்தில் 60 சதவீத மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் கிடைக்காது.
தமிழகத்தில் லட்சம் முதல் ஒரு கோடி வரை பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்கு இந்த வருடம் 1500 கோடி ரூபாய் வழங்கியுள்ளார் மோடி. அந்த 1500 கோடி ரூபாயை பட்டியல் சமுதாய மக்களின் மேம்பாட்டுக்கு செலவிடாமல் இவர்களின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற செலவிடுகிறார்கள்.
சென்னையில் ரக்சன் என்ற ஒரு 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலின் காரணமாக உயிர் இழந்துள்ளார். இதை அடுத்து அந்த குழந்தையின் பெற்றோர் சீரான குடிநீர் விநியோகம் இல்லாத காரணத்தினால் பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து வைத்த காரணத்தினால் தான் டெங்கு கொசு உருவாகி அந்த 4 வயது சிறுவன் உயிர் இழக்க காரணமாகிவிட்டது. இதை சரி செய்ய வேண்டியது அரசினுடைய கடமை. ஆனால் ஊழல் திமுக அரசின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொசுவத்தி படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
குழந்தை இறந்த துக்கத்தில் இருக்கும் குடும்பத்தாரை இன்னும் அசிங்கப்படுத்துவது போல் உள்ளது உதயநிதியின் செயல்பாடு. மூன்றாம் தலைமுறை வாரிசு அரசியல்வாதிக்கு எளிய மக்களின் கஷ்டம் எப்படித் தெரியும்?
தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், வாக்களித்த மக்களையும் கேலி செய்வது போல் பொறுப்பற்றுச் செயல்படும் ஊழல் திமுகவுக்கு, வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
மக்கள் நலனை முன்னிறுத்தி நல்லாட்சி தரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக்க, இந்த முறை தமிழகம் முன்னிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.