வரும் 18-ம் தேதி தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடருக்கு முன்பாக , நாடாளுமன்ற ஊழியர்களுக்குச் சிறப்பு சீருடை தயார் செய்யப்பட்டிருக்கிறது.
ஆண் மற்றும் பெண் என இரு பாலரும் அணிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள, இளம் சிவப்பு நிறத்தில் தாமரை அச்சிடப்பட்ட சட்டையும், காவி நிற கால் சட்டையும், செப்டம்பர் 6ம் தேதியன்றே வழங்கப்பட்டதாக நாடாளுமன்ற அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பழைய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு நீண்ட காலமாகி விட்டதால், நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்குப், பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்தது.
இதையடுத்து, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதி, டெல்லி சென்ட்ரல் விஸ்டா பகுதியில் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் அருகிலேயே, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவதற்கு பாரதப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த மே மாதம் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. இதையடுத்து, இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மே மாதம் 28-ம் தேதி திறந்து வைத்தார். இந்தப் புதிய நாடாளுமன்றம் 1,250 கோடி ரூபாய் மதிப்பில், 64,500 சதுர மீட்டர் பரப்பளவில், 1,224 இருக்கைகளுடன் கட்டப்பட்டிருக்கறது. நாடாளுமன்றத்தின் மக்களவை தேசியப் பறவையான மயில் வடிவத்திலும், மாநிலங்களவை தேசிய மலரான தாமரை வடிவத்திலும் கட்டப்பட்டிருக்கின்றன.
மேலும், இந்தப் புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படும் கலை மற்றும் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருப்பதுதான் சிறப்பம்சமாகும். உதாரணமாக, கட்டுமானப் பணிக்கான எம்.சாண்ட் மணல், ஹரியானாவில் இருந்தும், சிமென்ட் கற்கள் ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் இருந்தும் வரவழைக்கப்பட்டன. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தானில் இருந்து ஜல்லிக் கற்களும், கட்டடத்தின் மேற்கூரைக்கான உருக்கு டையூ-டாமனில் இருந்தும் கொண்டு வரப்பட்டன.
அதேபோல, தரைத்தளம் மற்றும் பக்கவாட்டு சுவர்களில் பதிக்க ராஜஸ்தானில் இருந்து சிவப்பு வெள்ளை மார்பிள் கற்கள், உதய்பூரில் இருந்து கேஷரியா பச்சை நிறக் கற்கள், அஜ்மீரிலிருந்து சிவப்பு நிறக் கற்கள் கொண்டு வரப்பட்டன. மேலும், அசோகச் சின்னத்துக்கான பொருட்கள் ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து கொண்டு வரப்பட்டன. இது தவிர, தமிழகத்தின் செங்கோலும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நிறுவப்பட்டிருக்கிறது.
இவ்வளவு பெருமைகள் வாய்ந்த இந்த புதிய நாடாளுமன்றக் கட்டத்தில்தான், சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறவிருக்கிறது. அதாவது, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கி ஒரு வார காலத்துக்கு நடைபெறவிருக்கிறது. முதல் நாள் பழைய நாடாளுமன்றத்தில் தொடங்கும் கூட்டத்தொடர், மறுநாளான 19-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, புதிய நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புதிய நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு, நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் புதிய சிறப்பு சீருடை தயார் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, இளஞ்சிவப்பு நிறத்திலான மேல்சட்டை, காக்கி கால்சட்டை புதிய சீருடையாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டையில் தேசிய மலரான தாமரைப் பூக்கள் அச்சிடப்பட்டிருக்கிறது.
மேலும், சபைக் காவலர்கள் இதே சீருடையுடன் கூடுதலாக மணிப்பூர் தலைப்பாகை அணிந்திருப்பார்கள். இது தவிர, நாடாளுமன்ற வளாகப் பாதுகாவலர்களின் சீருடையும் மாற்றப்படுகிறது. சஃபாரி உடைக்குப் பதிலாக ராணுவத்தினர் அணியும் உருமறைப்பு உடைகள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய ஆடைகளை பாட்னாவிலுள்ள தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்து தயாரித்தும் கொடுத்திருக்கிறது.