குளிர்காலப் பருவத்தில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டை 20 சதவீதம் குறைக்க மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
டெல்லியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற காணொலி நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு, கூறியதாவது, இரசாயன உரங்கள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். இரசாயன உரங்களுக்கு மாற்றாக நானோ திரவ யூரியா, நானோ திரவ டிஏபி, உயிரி உரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். குளிர்காலப் பருவத்தில் இரசாயன உரங்கள் பயன்பாட்டை 20 சதவீதம் குறைக்க வேண்டும் என்று விவசாயிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.
உரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்கள் உள்ளிட்டவை விவசாய பயன்பாட்டுக்கான யூரியாவை தொழில் நிறுவனங்களுக்கு மடைமாற்றி விநியோகிக்கின்றன. இந்தக் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவா்கள் மீது கடந்த 6 மாதங்களில் மத்திய அரசு கடுமையாக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபடும் யூரியா உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள் மற்றும் வாங்குவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு 45 கிலோ எடைகொண்ட வேம்பு கலந்த யூரியா பை ஒன்றை ரூபாய் 266-க்கு மானிய விலையில் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த யூரியாவின் விலை, தொழில் நிறுவனங்கள் பயன்பாட்டுக்கான யூரியாவின் விலையைவிட மிகக் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.