மணல் அதிபர்கள் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டைத் தொழிலதிபரும், திமுக அரசுக்கு மிகவும் நெருக்கமான மணல் குவாரி நடத்தி வருபவருமான இராமச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவினர் நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
நிஜாம் காலனி பகுதியில் உள்ள அவரது வேதாந்தா அலுவலகத்திற்குக் காலை 9.30 மணிக்கு 2 கார்களில் அதிகாரிகள் வந்தனர். இதில், ஒரு கார் கேரள பதிவு எண்ணும், மற்றொரு கார் சென்னை பதிவு எண்ணும் கொண்டதாக இருந்தது.
தொழிலதிபர் இராமச்சந்திரன் அலுவலகத்திற்குள் சென்ற அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் இரவு தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று காலை, அதாவது 2 -வது நாளான இன்று மீண்டும் சோதனையைத் தொடர்ந்து வருகின்றனர்.
அண்மையில் வெளியான ஒரு பிரபல திரைப்படத்தில் கதாநாயகனைப் போல், குறைந்த கால அளவில், பொருளாதாரத்தில் கரிகாலன் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்தவர்.
மணல் தொழிலில் கரிகாலனை வளர்த்துவிட்டவர் ரத்னம். முன்பு சாதாரணமாக இருந்தவர், இப்போது கொடிகட்டி பறந்து வருகிறார். தற்போது BMW X7 உள்ளிட்ட 20 உயர் ரக கார்கள் உள்ளன.
அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தில் உள்ள ரத்தினத்தின் உறவினரான கரிகாலன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள கட்டுமான அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2016 ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடைபெற்றபோது, மணல் தொழிலில் இவர் வரி ஏய்ப்பு செய்ததாகவும், இதன் காரணமாக, வருமான வரித்துறையினர் 20 இடங்களில் சோதனை நடத்திய நிலையில், தற்போது அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த சிலர் மணல் குவாரி விவகாரத்தில் சிக்கியுள்ளதால், இந்த ரெய்டு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், திமுகவைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் நடுக்கத்தில் உள்ளனர்.
சோதனை நடைபெறும் இடங்களில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.