கடந்த 30 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியேறி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் இருந்து செயல்படும் 4,000-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் 1987 முதல்1990 வரையிலான காலக்கட்டத்தில் தீவிரவாதம் உச்சக்கட்டத்தில் இருந்தது. குறிப்பாக, 1990 ஜனவரி மாதம் இறுதியில் நடந்த இந்து பண்டிட் இனப்படுகொலை கொடூரத்திலும் கொடூரம். இதனால், பண்டிட் சமூகத்தினர் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேறி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தஞ்சமடைந்தனர். பின்னர், மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக, ஏராளமான தீவிரவாதிகள் இந்தியாவை விட்டு வெளியேறி பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும் தப்பியோடினர்.
அதேசமயம், கடந்த 2014-ம் ஆண்டு பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, ஜம்மு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகளுக்கு நெருக்கடி தொடங்கியது. குறிப்பாக, கடந்த 2019-ம் ஆண்டு 2-வது முறையாக மீண்டும் பிரதமரான மோடி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தார். இதன் பிறகு, இராணுவம், துணை ராணுவம், மாநில காவல்துறை என 3 பிரிவுகளையும் களமிறக்கிய மத்திய அரசு, தீவிரவாதிகளை வேட்டையாடத் தொடங்கியது. இதில், 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகினர். இதையடுத்து, ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் இந்தியாவை விட்டு ஓட்டம் பிடித்தனர். பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் அடைக்கலம் புகுந்திருக்கும் இத்தீவிரவாதிகள், அங்கிருந்தபடியே இந்தியாவில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். இதுபோன்று தப்பிச் சென்ற தீவிரவாதிகளை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளிகளாக மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில், அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் மாநில அரசு இறங்கி இருக்கிறது.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 4,200 தீவிரவாதிகள், இந்திய அரசாங்கத்தால் “பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்” பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இதையடுத்து, மேற்கண்ட தீவிரவாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அரசு அதிகாரிகள் தொடங்கி இருக்கின்றனர்.
அந்த வகையில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மற்றும் மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்.ஐ.ஏ.) போன்ற அமைப்புகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் டஜன் கணக்கான சொத்துக்களை கைப்பற்றியுள்ளன. அதேபோல, ஜம்மு காஷ்மீர் காவல்துறை கடந்த வாரத்தில் தோடா மாவட்டத்தில் 16 சொத்துக்களை கைப்பற்றி இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக, ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குனர் ஜெனரல் தில்பாக் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாகிஸ்தானுக்குச் சென்று தஞ்சம் புகுந்தவர்கள் முன்பு இங்கு தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள். தற்போது எல்லை தாண்டி இருந்து வலையமைப்புகளை இயக்குகின்றனர். இதில், சம்பந்தப்பட்டவர்களின் பட்டியலை நாங்கள் தயாரித்திருக்கிறோம். சமீபத்தில் தோடா மாவட்டத்தில் நாங்கள் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து, அவர்களின் சொத்துக்களைக் கைப்பற்றி இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார். அதேபோல, தீவிரவாதிகளுக்கு தெரிந்தே அடைக்கலம் கொடுத்த குற்றவாளிகளின் சொத்துக்களையும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை சமீபகாலமாக பறிமுதல் செய்து வருகிறது.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச ஆளுநர் மனோஜ் சின்ஹா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காஷ்மீர் பள்ளத்தாக்கின் உள்ளூர் மக்கள், தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கவோ அல்லது தங்குமிடம் வழங்கவோ வேண்டாம். தீவிரவாதம் காரணமாக ஜம்மு காஷ்மீர் மக்கள் பல தசாப்தங்களாக அச்சத்தில் வாழ்கின்றனர். உங்கள் ஆதரவுடன் ஜம்மு காஷ்மீர் முழுவதும் உள்ள தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்று கூறியிருக்கிறார்.