குஜராத்திலிருந்து ஆன்மிகப் பயணம் சென்றவர்கள் பேருந்து மீது, ராஜஸ்தான் மாநிலத்தில் கனரக வாகனம் மோதியதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் பவ் நகரின் திஹோர் பகுதியைச் சேர்ந்த குழுவினர், ஆன்மிகப் பயணமாக ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு பேருந்தில் சென்றனர். ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் தரிசனத்தை முடித்து விட்டு உத்தரப் பிரதேச மாநிலம் விருந்தாவன் நகருக்கு புறப்பட்டனர். பாரத்பூர் மாவட்டம் லகான்பூர் பகுதியில் உள்ள அந்த்ரா பாலத்தில் சென்றபோது, பேருந்து பழுதாகி நின்று விட்டது.
இதனால், பேருந்தில் இருந்தவர்கள் கீழே இறங்கி பேருந்தின் பின்புறமும், பக்கவாட்டுப் பகுதியிலும் நின்றிருந்தனர். அப்போது, பின்புறம் வேகமாக வந்த கனரக வாகனம் (ட்ரெய்லர் லாரி), பேருந்தின் பின்புறத்தில் பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில், 6 பெண்கள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.