கழிவுநீர் அடைப்பைத் தூய்மைப்படுத்தும் போது, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் தான், முதலிடத்தில் உள்ளது எனத் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், மதுரை தெப்பக்குளம் அருகில் பாதாளச் சாக்கடையில் இறங்கி தூய்மைப் பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணம் இன்றி வேலை செய்வதாகப் புகார் எழுந்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன், அங்கு ஆய்வு செய்தார். பின்னர், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன், இந்தியாவில் 11 மாநிலங்களில் தான் தூய்மை பணியாளர் ஆணையம் உள்ளது. அடுத்து, புதுச்சேரியில் தூய்மை பணியாளர் ஆணையம் தொடங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
தூய்மை பணியில் ஒப்பந்த முறைகளை ஒழிக்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளே நேரடியாக பணம் வழங்க வேண்டும். ஒரு சில மாநிலங்களில் இந்த முறை பின்பற்றப்படுகிறது.
பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்வது மிகவும் ஆபத்தான பணி. இதனை யாரும் செய்யக் கூடாது. தூய்மைப் பணியின்போது கழிவுநீர் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்கும் பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்து வருவது வேதனை அளிக்கிறது. உயிரிழப்போர் எண்ணிக்கையில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. 2-வது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது.
கடந்த 1993-ம் ஆண்டிலிருந்து இதுவரை தமிழகத்தில் கழிவுநீர் அடைப்பைச் சரிசெய்யும் பணியின் போது விஷவாயு தாக்கி 400 பேர் இறந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 50 பேர் பலியாகியுள்ளனர் என்றவர், துப்புரவு பணியாளர்கள், பாதுகாப்பு கருதி இரவு நேரங்களில் சாலையோரம் படுத்துத் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.