பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.7210 கோடி நிதி ஒதுக்கீட்டில் மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.7210 கோடி நிதி ஒதுக்கீட்டில் நான்கு ஆண்டுகளுக்கு (2023 முதல்) மத்திய அரசின் திட்டமான மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் அனைவருக்கும், அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதிக்கான அணுகலை மேம்படுத்துவதற்கான முக்கிய முன்னெடுப்பாக மின்நீதிமன்ற திட்டம் உள்ளது.
தேசிய மின் நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய நீதித்துறையின் தகவல் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்காக மின் நீதிமன்றங்கள் திட்டம் 2007 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கட்டம்-1 மற்றும் கட்டம்-2 ஆகியவற்றின் ஆதாயங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதன் மூலம், மின்னணு, ஆன்லைன் மற்றும் காகிதமில்லா நீதிமன்றங்களை நோக்கி நகர்வதன் மூலம், பாரம்பரிய பதிவுகள் உட்பட முழு நீதிமன்ற பதிவுகளையும் டிஜிட்டல் மயமாக்குவதன் மூலமும், அனைத்து நீதிமன்ற வளாகங்களையும் இ-சேவை மையங்களுடன் இணைப்பதன் மூலம் மின்னணு தாக்கல், மின்னணு செலுத்தல்களைப் பரவலாக்குவதன் மூலமும் அதிகபட்ச நீதியின் ஆட்சியை ஏற்படுத்துவதை இ-நீதிமன்றங்கள் கட்டம்-3 நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது வழக்குகளை திட்டமிடும்போது அல்லது முன்னுரிமையளிக்கும் போது நீதிபதிகள் மற்றும் பதிவேடுகளுக்கு தரவு அடிப்படையிலான முடிவுகளை எடுக்க உதவும் நுண்ணறிவு ஸ்மார்ட் அமைப்புகளை அமைக்கும். மூன்றாம் கட்டத்தின் முக்கிய நோக்கம் நீதித்துறைக்கு ஒரு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தளத்தை உருவாக்குவதாகும், இது நீதிமன்றங்கள், வழக்குதாரர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு இடையில் தடையற்ற மற்றும் காகிதமற்ற தொடர்பை வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.