புதிய ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 60 சதவீதம் வேகமான செயல்திறனுடன் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.41,900 இல் இருந்து ஆரம்பமாகும்.
ஆப்பிள் அதன் வொண்டர்லஸ்ட் நிகழ்வில் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 ஐ வெளியிட்டது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 புதிய S9 பிராசஸருடன் வருகிறது. இது வாட்ச் சீரிஸ் 8 ஐ விட 60% வேகமாக செயல்படக்கூடியது என்று ஆப்பிள் கூறுகிறது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 வாட்ச்கள் 41 மிமீ மற்றும் 45 மிமீ அளவுகளில் ஸ்டார்லைட், மிட்நைட், சில்வர், சிவப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கும். பிங்க் அலுமினியம், தங்கம், வெள்ளி மற்றும் கிராஃபைட் நிறங்களில் கேஸ் கவர்கள் உள்ளன. ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் 40க்கும் மேற்பட்ட பிற நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் Apple Watch Series 9 மற்றும் Apple Watch SE ஆகியவற்றை இன்று முதல் ஆர்டர் செய்யலாம்.
செப்டம்பர் 22ஆம் தேதி முதல் கடைகளில் புதிய ஆப்பிள் வாட்ச்கள் கிடைக்கும். ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 விலை ரூ.41,900 இல் இருந்து ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.
புதிய ஆப்பிள் வாட்சில் உள்ள டிஸ்ப்ளே 2000 நிட்கள் வரை பிரகாசத்தை வழங்குகிறது. இது சீரிஸ் 8 ஐ விட இரு மடங்கு பிரகாசமாக உள்ளது. மேலும், வாட்ச் சீரிஸ் 9 இன் டிஸ்ப்ளே 1 நைட் வரை டார்க் ஆகவும் இருக்கும்.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 சிரி அசிஸ்டெண்டுடன் புதிய அம்சங்களைப் பெற்றுள்ளது. இதுவும் முந்தைய மாடலை விட இரண்டு மடங்கு துல்லியமானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 வாட்ச் ஓஎஸ் 10 இயங்குதளத்தில் செயல்படும். ஸ்மார்ட் ஸ்டாக், சைக்கிள் ஓட்டுதல் போன்ற வசதிகள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன. மனநலம் குறித்த அம்சமும் வாட்ச் சீரீஸ் 9 இல் இடம்பெறுகிறது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 புதிய அல்ட்ரா வைடு பேண்ட் (UWB) பிராசஸரைக் கொண்டுள்ளது, இதன் மூலம் ஃபைண்ட் மை ஆப்ஸ் வசதியை பயன்படுத்துவது எளிதாகிறது. இந்த பிராசஸர் மூலம் HomePod உடன் வாட்ச் சீரிஸ் 9 ஐ இணைத்து பயட்படுத்துவதும் சுலபம்.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் அனைத்து முக்கிய அம்சங்களுடன் டபுள் டேப் வசதியையும் உள்ளடக்கி இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் மொபைல் அழைப்புகளை வாட்ச் மூலம் ஏற்பது போன்ற பலவற்றை எளிதாகச் செய்ய முடியும். ஆப்பிள் வாட்ச் புதிய FineWoven பேண்டுடன் வெளியாகியுள்ளது. ஹெர்ம்ஸ் மற்றும் நைக் நிறுவனங்களுடன் இணைந்து கூடுதலாக புதிய பேண்டுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.