திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்று பாலம் அருகே அருள்மிகு சுடலையாண்டவர் திருக்கோவிலில் உள்ள சுவாமி சிலையை மர்ம நபர்கள் உடைத்துள்ள சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் திருக்கோவில். இந்த திருக்கோவிலில் சுமார் 5 அரை அடி உயரம் கொண்ட சுடலையாண்டவர் சுவாமி சிலை கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு, பொங்கல், அமாவாசை, பௌர்ணமி, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை மற்றும் முக்கிய திருவிழாக் காலங்களில், பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல், தங்கள் வேண்டுதல் நிறைவேறிய உடன் நேர்த்திக்கடன் செலுத்துவதும் வழக்கத்தில் உள்ளது.
இந்த நிலையில், திருக்கோவிலில் உள்ள 5 அரை அடி உயரம் கொண்ட அருள்மிகு சுடலையாண்டவர் சுவாமி சிலையை மர்ம நபர்கள் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர்.
தகவல் அறிந்து திருக்கோவிலுக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, சுவாமி சிலையை உடைத்தவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, அருள்மிகு சுடலையாண்டவர் திருக்கோவில் சுவாமி சிலையை உடைத்த நபர்களை காவல்துறை உடனே கைது செய்யவேண்டும் என்று பாஜக மற்றும் ஹிந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், திமுக ஆட்சிக்கு வந்த பின் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிலை உடைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த செயலுக்கு இந்துமுன்னணி கடும் கண்டனம் தெரித்துள்ளது.
அருள்மிகு சுடலையாண்டவர் சுவாமி சிலை உடைக்கப்பட்டுள்ளதால், நெல்லையில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. திருக்கோவில் அருகே காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.