நாட்டிலுள்ள 9 தொலைக்காட்சி நிறுவனங்களின் 14 செய்தித் தொகுப்பாளர்கள் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சிகளை புறக்கணிக்க எதிர்கட்சியான “இண்டியா” கூட்டணித் தலைவர்கள் முடிவு செய்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. “இண்டியா” கூட்டணியின் இம்முடிவை “எமர்ஜென்ஸி 2.0” என்று பா.ஜ.க. வர்ணித்திருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தை இழந்துவிட்டுத் தவித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக, 28 எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து “இண்டியா” என்கிற பெயரில் புதிய கூட்டணியை அமைத்திருக்கிறது. இக்கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள், பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் நடந்தன.
இந்த சூழலில், தேர்தல் வியூகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஆராய, “இண்டியா” கூட்டணி சார்பில் 14 உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம், டெல்லியிலுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் இல்லத்தில் நடந்தது. இக்கூட்டத்தில், மொத்தமுள்ள 14 உறுப்பினர்களில் 12 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், மாநில வாரியாக கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதோடு, பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, “இண்டியா” தரப்பில் இருந்து, 9 தொலைக்காட்சிகளின் 14 செய்திக் தொகுப்பாளர்களை புறக்கணிப்பதாகக் கூறி, ஒரு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இவர்கள் வெறுப்பு நிறைந்த செய்தி விவாதங்களை நடத்துவதாகவும், ஆகவே அவர்கள் நடத்தும் விவாத நிகழ்ச்சியை புறக்கணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பட்டியலில், நியூஸ் 18 அமன் சோப்ரா, அமிஷ் தேவ்கன், ஆனந்த் நரசிம்மன், ஆஜ் தக்கின் சித்ரா திரிபாதி, சுதிர் சவுத்ரி, இந்தியா டுடேயின் கௌரவ் சாவந்த், ஷிவ் அரூர், இந்தியா டி.வி.யின் பிராச்சி பராஷர், ரிபப்ளிக் பாரதத்தின் அர்னாப் கோஸ்வாமி, பாரத் 24 டி.வி.ன் ரூபிகா லியாகத், டைம்ஸ் நவ் நவ்பாரத்தின் நவிகா குமார், சுஷாந்த் சின்ஹா, பாரத் எக்ஸ்பிரஸ் அதிதி தியாகி, டி.டி. நியூஸின் அசோக் ஸ்ரீவஸ்தவ் ஆகியோரின் இடம் பெற்றிருக்கின்றனர்.
ஆனால், “இண்டியா” கூட்டணியில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத 2 கட்சிகளின் தலைவர்கள், இந்த நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்ததோடு, இதுகுறித்து தங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறியிருக்கின்றனர். அதேசமயம், காங்கிரஸ் கட்சியின் ஊடகத் துறைத் தலைவர் பவன் கேரா கூறுகையில், “கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். அதற்காக, இந்த அறிவிப்பாளர்களை நாங்கள் எதிர்க்கவில்லை, வெறுக்கவில்லை. இந்த வெறுப்புக் கடைகளை மூட எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க விரும்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.
“இண்டியா” கூட்டணியின் இந்த முடிவுக்கு நியூஸ் ப்ராட்காஸ்டர்கள் மற்றும் டிஜிட்டல் அசோசியேஷனை சேர்ந்த ஊடகவியாளர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்கள். “இது ஊடகங்களின் வாயை அடைப்பது போன்றது. உண்மையில், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் பேச்சு சுதந்திரத்தை பிரச்சாரம் செய்யும் கூட்டணி, இந்த நடவடிக்கையின் மூலம் அதைக் குறைக்கிறது. ஆனாலும் நாங்கள் அனைவரையும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தொடர்ந்து அழைப்போம்” என்று கூறியிருக்கிறார்கள்.
என்.பி.டி.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த முடிவுஆழ்ந்த வேதனை மற்றும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கிறது. இந்தியாவின் சில முக்கியத் தொலைக்காட்சி செய்தி ஆளுமைகள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க எதிர்கட்சி கூட்டணியின் பிரதிநிதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஜனநாயகத்தின் நெறிமுறைகளுக்கு எதிரானது. இது சகிப்பின்மையைக் குறிக்கிறது மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை பாதிக்கிறது. ஆகவே, இம்முடிவை திரும்பப் பெற வேண்டும்” என்று கூறியிருக்கிறது.
இதுகுறித்து தூர்தர்ஷனின் தொகுப்பாளர் அசோக் ஸ்ரீவஸ்தவ் கூறுகையில், “48 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திரா காந்தியின் அவசரநிலைக்கு எதிராக எனது தந்தை குரல் எழுப்பினார். ஆகவே, எனது தந்தைக்கு எதிராக காங்கிரஸ் அரசாங்கம் மிசா வாரண்ட் பிறப்பித்தது. ஆனால், என் தந்தை பயப்படவும் இல்லை, இந்திராவிடம் மன்னிப்புக் கேட்கவும் இல்லை. இன்று, எதிர்கட்சிகள் நாட்டில் 2.0 அவசரநிலையை விதிக்க விரும்புகின்றன. இன்றும் நாம் போராட வேண்டும், பயப்பட வேண்டாம்” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா, “நேரு, பேச்சு சுதந்திரத்தை குறைத்து, தன்னை விமர்சித்தவர்களை கைது செய்தார். இதில் இந்திரா தங்கப் பதக்கம் வென்றவர். உறுதியான நீதித்துறை, உறுதியான அதிகாரத்துவம் மற்றும் பயங்கரமான அவசரநிலையை திணித்தார். ராஜிவ் ஊடகங்களை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றார். ஆனால், படுதோல்வி அடைந்தார். சோனியா தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, காங்கிரஸின் கருத்துகளை விரும்பாத காரணத்தால் சமூக ஊடகக் கையாளுகைகளைத் தடை செய்தது” என்றார்.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், “ஜனநாயகத்தின் மீது எதிர்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை என்பதை இது காட்டுகிறது. வங்காளத்தையும், தமிழகத்தையும், மற்ற எதிர்கட்சி ஆளும் மாநிலங்களையும் பாருங்கள்… பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்போது பத்திரிகையாளர்களை புறக்கணிப்பது பற்றிப் பேசுகிறார்கள். இது வெட்கக்கேடானது. காங்கிரஸ் கட்சியின் “எமர்ஜென்ஸி 2.0″ இது. இதன் மூலம் ஊடகங்களை நசுக்கவும், அழுத்தம் கொடுக்கவும் கமாண்டியா கூட்டணி பார்க்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
The following decision was taken by the INDIA media committee in a virtual meeting held this afternoon. #JudegaBharatJeetegaIndia #जुड़ेगा_भारत_जीतेगा_इण्डिया pic.twitter.com/561bteyyti
— Pawan Khera 🇮🇳 (@Pawankhera) September 14, 2023