புயல், மழை காரணமாக லிபியா நாட்டில் 11,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியன் கடல் பகுதியில் அண்மையில் புயல் உருவானது. டேனியல் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் கடந்த 10-ம் தேதி லிபியாவின் பங்காசி பகுதியில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
இந்த புயலால் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழையால் கிழக்கு லிபியா பகுதியில் டெர்னா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்தநதியில் கட்டப்பட்டுள்ள 2 அணைகள் உடைந்தன. இதன் காரணமாக டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
“புயல், கனமழை மற்றும் அணைகள் உடைப்பால் இதுவரை 11,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை’’ என்று கிழக்கு லிபியா நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிழக்கு லிபியாவில் 3 நாள் துக்கம்அனுசரிக்கப்படும் என பிரதமர்ஒசாமா ஹமாத் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் நேரில் சென்று மீட்புப் பணிகளை விரைவுப்படுத்தியுள்ளார்.
கிழக்கு லிபியாவில், உள்நாட்டு இராணுவம், ஐ.நா. சபை, செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்டவை மீட்புப் பணிகள் மேற்கொண்டு வருகின்றன.
மீட்பு பணிகளில் 3,000 க்கும் மேற்பட்ட உடல்கள் டெர்னாவுக்கு வெளியே புதைக்கப்பட்டன. இடிபாடுகள் மற்றும் சேற்றில் பல உடல்கள் புதைந்துள்ளதாக நம்பப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீட்புப் பணியாளர்கள் கனரக இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைக் கொண்டு மீட்பு பணிகளில் போராடி வருகின்றனர். தற்போது நிலைமைப் பொறுத்து எண்ணிக்கை 20,000 ஆக கூட உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.