தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய அஜித் பவார், கட்சி மற்றும் கட்சிச் சின்னத்துக்கு உரிமைகோரி, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது அக்டோபர் மாதம் 6-ம் தேதி விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வும், சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில், இக்கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்றது. ஆனால், யார் முதல்வர் என்பதில் இரு கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணி உடைந்தது. இதையடுத்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியைக் கைப்பற்றியது.
ஆனால், பொருந்தாத கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி அமைத்தது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில், சிவசேனா கட்சியின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, அக்கட்சியிலிருந்து வெளியேறி 38 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்தார். இதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டார்.
இதனிடையே, சிவசேனாவுடன் கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் புகைச்சல் தொடங்கியது. அக்கட்சியின் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி மகாராஷ்டிராவை ஆளும் அரசுக்கு ஆதரவளித்தார். இதையடுத்து, அம்மாநிலத் துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் கட்சியின் சின்னம் ஆகியவற்றுக்கு உரிமை கோரி, அஜித் பவார் தரப்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல, சரத் பவார் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது அக்டோபர் 6-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த இருக்கிறது. ஆகவே, அன்றையதினம் இரு தரப்பிலும் இருந்து பிரதிநிதிகளை அனுப்பி வைக்கும்படி, சரத் பவார் மற்றும் அஜித் பவார் பிரிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இரு தரப்பில் இருந்து வழங்கப்படும் முழுமையான பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில், இந்தியத் தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்கும் என்று தெரிகிறது.
இதுகுறித்து அஜித் பவார் கூறுகையில், “எல்லோருக்கும் அவர்களுடைய தரப்பு வாதங்களை முன்னெடுத்து வைக்க உரிமை உள்ளது. அதனடிப்படையில் நாங்கள் எங்களுடைய தரப்பு வாதத்தை இந்திய தேர்தல் ஆணையம் முன் எடுத்து வைப்போம்” என்று தெரிவித்திருக்கிறார்.