தேசிய நீதித்துறை தரவு அமைப்புக்குள் உச்ச நீதிமன்றத்தின் விவரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்திருப்பதற்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்புத் தெரிவித்திருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்தின் அலுவல் நேரம் நேற்று தொடங்கியவுடன் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், “உச்ச நீதிமன்ற வழக்கு விவரங்கள் உட்பட அனைத்தும் தேசிய நீதித்துறை தரவுகளின் அமைப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், உச்ச நீதிமன்றத்தில் எத்தனை வழக்குகள் புதிதாக பதிவு செய்யப்படுகிறது? எத்தனை வழக்குகள் அரசியல் சாசன அமர்வின் கீழ் உள்ளது? இவற்றில் எத்தனை வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? என்பன போன்ற அனைத்து விவரங்களையும் இனிமேல் வெளிப்படையாகத் தெரிந்துகொள்ள முடியும்.
மேலும், இந்த செயல்பாடானது முக்கியமான தகவல்களை கொடுக்கும் விதமாக உருவாக்கப்பட்ட தனித்துவமான மற்றும் தகவல் தரும் இணையதளமாகும். இது வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த இணையதளத்தில் நிகழ்நேர அடிப்படையில் தரவுகள் அனைத்தும் உடனுக்குடன் புதுப்பிக்கப்படும். இந்த இணையதளத்தை திறந்தவுடன் வழக்குகள் தொடர்பான அனைத்து விவரங்களும் கிடைத்து விடும். எனினும், இதில் பல பாதுகாப்பு அம்சங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக கடந்த 2000-ம் ஆண்டுக்கு முன்னதாக தொடரப்பட்ட வழக்குகள் நூற்றுக்கணக்கில் இருக்கும் நிலையில், அவற்றை விரைந்து விசாரித்து முடிக்கும் விதமாக, உடனடியாக புதிய அமர்வுகள் உருவாக்கப்படும். குறிப்பாக, இந்தாண்டு ஜூலை மாதம் வரையில் உச்ச நீதிமன்றத்தால் 5,500 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. அதேசமயத்தில், 3,115 புதிய வழக்குகளும் பதிவாகியுள்ளது” என்று தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவிப்பைப் பாராட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “நிலுவையில் உள்ள வழக்குகளைக் கண்காணிக்கும் தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பின் கீழ் உச்ச நீதிமன்றம் வரும் என்கிற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நடவடிக்கை பாராட்டுக்குரியது.இத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது நமது நாட்டில் வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரிக்கும் மற்றும் நீதி வழங்கும் முறையை மேம்படுத்தும்” என்று தெரிவித்திருக்கிறார்.