வாரணாசியிலுள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தும்போது கிடைக்கும் ஆதாரங்களை ஆவணப்படுத்தி பாதுகாப்பாக மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய தொல்லியல் துறைக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் எதிரே ஞானவாபி மசூதி அமைந்திருக்கிறது. இந்த மசூதி 17-ம் நூற்றாண்டில் இந்து கோவிலை இடித்துவிட்டு, இஸ்லாமிய மன்னர் ஒளரங்கசீப்பால் கட்டப்பட்டது என்று இந்துக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல, இந்த மசூதியின் சுற்றுச்சுவரில் சிருங்கார கௌரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் நாள்தோறும் வழிபாடு நடத்த அனுமதி கோரி, 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. இந்த ஆய்வுக்குத் தடை கோரி, மசூதி தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் டெல்லி உச்ச நீதிமன்றத்தை நாடியும் பலனளிக்கவில்லை. கடந்த மாதம் 4-ம் தேதி முதல் தொல்லியல் துறையின் ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது. இம்மாதம் 2-ம் தேதியோடு, ஆய்வுக்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், கூடுதல் அவகாசம் கோரப்பட்ட நிலையில், அக்டோபர் 6-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், ஆய்வின்போது கிடைக்கும் ஆதாரங்கள் மற்றும் வளாகத்தை பாதுகாக்கும் வகையில், ஞானவாபி மசூதிக்குள் இஸ்லாமியர்கள் நுழைவதை தடுக்க வேண்டும் என்று இந்துக்கள் தரப்பில் ராக்கி சிங் என்பவர் வாரணாசி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, ஞானவாபி மசூதி ஆய்வின்போது கிடைக்கும் ஆதாரங்களை ஆவணப்படுத்தி பாதுகாக்குமாறு இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழலில், ஆதாரங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்குமாறு தொல்லியல் துறைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.