கோவையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள், 2- வது நாளாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை மருதமலை சாலையில் நவாவூர் பிரிவு பகுதியில் ஸ்ரீதக்ஷா பிராப்பர்டீ அண்ட் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
ஸ்ரீதக்ஷா பிராப்பர்டீ அண்ட் டெவலப்பர்ஸ் தலைமை அலுவலகம் மற்றும் வடவள்ளி குருசாமி நகர், அருள்நகர், பாலாஜி நகரில் உள்ள நிறுவனத்தின் இயக்குநர்கள் மோகன், ராமநாரயணன், மற்றும் அருள் ஆன்டனி ஆகியோரது வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான 50 இடங்களிலும் நேற்று காலை முதல் வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் மேற்கொண்டனர்.
காலை 11 மணி அளவில் 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 25-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் வருகை தந்தனர். அவர்கள் அனைவரும், கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்குள் சென்று அதிரடியாகச் சோதனை செய்தனர்.
அப்போது, அந்த அலுவலகத்தில் இருந்த ஊழியர்களை அதிகாரிகள் வெளியே விடவில்லை. வெளியே இருந்து யாரையும் உள்ளேயும் அனுமதிக்கவில்லை.
தமிழகம் முழுவதும் எத்தனை இடங்களில் குடியிருப்புகள் கட்டப்படுகிறது? ஒரு வீட்டின் விலை என்ன? அதற்கு ஆகும் செலவு என்ன? இதற்கு பணம் எப்படி வந்தது? அதற்கான ஆதாரம் என்ன? இதன் மூலம் கிடைத்த லாபம் எவ்வளவு? என்பது உள்பட பல்வேறு கேள்விகளைக் கேட்டு துளைத்தெடுத்தாக கூறப்படுகிறது. இந்த சோதனை நேற்று நள்ளிரவு 1 மணி வரை மொத்தம் 14 மணி நேரம் நடந்தது.
பின்னர், வீட்டிலிருந்து யாரும் வெளியே செல்ல முடியாத படியும், வெளியே இருந்து யாரும் உள்ளே வர முடியாத படியும் காவல்துறை மூலம் தடுப்பு ஏற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, 2-வது நாளாகக் காலை 9.30 மணி முதல் கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மோகன், திமுக அமைச்சர் ஒருவருக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்று கூறப்படுகிறது.