சென்னையில் வரும் செப்டம்பர் 16-ந் தேதி திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெறுவதையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருடசேவைக்குத் தமிழகத்திலிருந்து செப்டம்பர் 16-ந் தேதி திருக்குடைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.
இந்த ஊர்வலம் சென்னை பூக்கடை சென்ன கேசவப் பெருமாள் கோவிலிலிருந்து செப்டம்பர் 16-ந் தேதி காலை 10.31 மணிக்குப் புறப்படும். இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொள்வார்கள்.
இதனையடுத்து, சென்னையில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் காலை 10.00 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 8.00 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையைக் கடக்கும் வரை என்.எஸ்.சி.போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் ஈ.வெ.ரா சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையைப் பயன்படுத்தலாம்.
மதியம் 3.00 மணி முதல் ஊர்வலம் பேசின் பிரிட்ஜை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் பேசின் பால சாலை, மின்ட் வழியாகப் பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையைப் பயன்படுத்தலாம். ஈ.வெ.ரா.சாலை, முத்துசாமி சாலை மற்றும் ராஜாஜி சாலைகளைப் பயன்படுத்தலாம்.
ஊர்வலம் மூலகொத்தளம் பகுதியை அடைந்தவுடன் பேசின் பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகன ஓட்டிகள் ராஜாஜி சாலை, ஈ.வெ.ரா சாலை மற்றும் டாக்டர் அம்பேத்கர் காலேஜ் சாலை ஆகிய சாலைகளைப் பயன்படுத்தலாம்.
ஊர்வலம் பேசின் பாலம் சாலையில் வரும்போது சூளை ரவுண்டானாவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாகச் செல்லலாம்.
திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது மசூதி பகுதியிலிருந்து சூளை ரவுண்டானா நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம்.
ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது நாராயணாகுரு சாலை ஈ.வி.கே. சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல், நகரின் பல்வேறு பகுதிகளில் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் செல்லும் நேரங்களில் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது