உலக அளவில் புத்திசாலித்தனம், கடின உழைப்பு ஆகியவற்றில் சிறந்தவர்கள் இந்தியர்கள் என்பதை உலகெங்கிலும் நிரூபித்து வருகிறார்கள். உலகளவில் பெரிய நிறுவனங்களை வழிநடத்துவதிலும், உரிமையாளர்களாக இருப்பதிலும் இந்தியர்கள் கொடிநாட்டி வருகிறார்கள்.
அந்த வகையில், FedEx நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜ் சுப்பிரமணியம் குறித்துப் பார்ப்போம்,
ராஜ் சுப்ரமணியம் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். இவர், மும்பை ஐஐடி-யில் இரசாயனப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், அமெரிக்காவில் உள்ள சைராகஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், ஆஸ்டினில் உள்ள டெக்சஸ் பல்கலைக்கழகத்தில் மார்கெட்டிங் மற்றும் பைனான்ஸ் பிரிவில் எம்பிஏ முதுலைப் பட்டமும் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, 1991-ஆம் ஆண்டு FedEx நிறுவனத்தில் சேர்ந்தார். பின், 1996-ஆம் ஆண்டு FedEx நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவில் தலைவராக பதவி உயர்வு பெற்றார். பின்னர், 2003-ஆம் ஆண்டு கனடாவின் பிராந்தியத் தலைவராக பதவி வகித்தார். இதன் பின், FedEx கார்ப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
தன்னுடைய அயராத உழைப்பாலும், சிறந்த அறிவாற்றலாலும், படிப்படியாக உயர்ந்து பல்வேறு உயர் பதவிகளை வகித்த இவர், 2022-ஆம் ஆண்டு FedEx நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இவருக்கு இந்திய வம்சாவளி மற்றும் புலம்பெயர் இந்தியர்களுக்கு இந்தியா வழங்கும் உயரிய விருதான பிரவாசி பாரதிய விருதை வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது.