எதிர்கட்சிகளின் கூட்டணிக்குப் பெயர் “இண்டியா” அல்ல “இண்டி” கூட்டணி. காரணம், ஏ என்பது கூட்டணியைக் குறிக்கும். இதை சேர்த்து சொன்னால் கூட்டணி என்கிற வார்த்தையை 2 முறை கூறுவது போலாகிவிடும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விளக்கம் அளித்திருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரத்திற்காக ராஜஸ்தான் சென்ற மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், உதய்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கடந்த 17 மாதங்களில் பெட்ரோல் மீதான கலால் வரியை 2 முறை குறைத்தது.
ஆனால், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகள் வாட் வரியைக் கூட்டி விட்டன. இதனால், மற்ற மாநிலங்களைவிட ராஜஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 முதல் 15 ரூபாய்வரை அதிகமாக விற்கப்படுகிறது. ராஜஸ்தானில் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதால், மக்கள் எல்லை தாண்டி அருகிலுள்ள மாநிலங்களுக்குச் சென்று பெட்ரோல் வாங்குகிறார்கள்.
ஊழல், சட்ட விரோதமாக சுரங்கங்களை நடத்துவது, கும்பல் வன்முறை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றில் ராஜஸ்தான் மாநிலம் நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கிறது. அன்பு ஊற்றெடுக்கும் சுரங்கத்தைத் திறக்கப் போவதாகக் கூறிய எதிர்கட்சிகள், வெறுப்பை விற்கும் மாபெரும் வணிக வளாகத்தைக் கட்டமைத்திருக்கிறார்கள். “இண்டி” கூட்டணியில் இருப்பவர்கள் சனாதன தர்மத்தை ஒழிக்கப் போவதாகக் கூறுகிறார்கள். வெறுப்பின் தூதுவரான ராகுல் காந்தி, அதற்கான அனுமதியை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்” என்றார்.
மேலும், ராஜஸ்தானின் துடு நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, “எதிர்கட்சிகளின் கூட்டணிக்குப் பெயர் “இண்டியா” (I.N.D.I.A.) அல்ல; “இண்டி” (I.N.D.I.) கூட்டணி. ஏனெனில், ஏ (A) என்பது கூட்டணியைக் குறிக்கும். ஆகவே, “இண்டியா” என்று கூறினால், கூட்டணி என்கிற வார்த்தையை 2 முறை கூறுவதாக ஆகிவிடும். எனவே, அது “INDI” கூட்டணிதான்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, சனாதன தர்மத்தை ஒரு நோய் என்கிறார். அவரது இந்த கருத்து குறித்து காங்கிரஸ் கட்சியும், ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட்டும் பதில் சொல்ல வேண்டும்” என்று வலியுறுத்தினார்.